லக்னோ : காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே தீடீரென்று மெளன விரதம் இருக்க போவதாக சொன்னார். அதைக் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், "கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அன்னா குழுவில் உறுப்பினராக உள்ள பிரசாந்த் பூஷன் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்க்கவே அன்னா மெளனவிரதம் இருக்கிறார்" என்று கூறினார்.
"காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே ஏன் பி.ஜே.பிக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை" என்று கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங், "குஜராத்தில் கடந்த 9 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா இல்லாமல் இருந்த போதும் அதைக் குறை கூறாமல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அன்னா புகழ்ந்தது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினார்.
"இது மாதிரி செயல்பாடுகளை இரட்டை நிலைப்பாடு என்று சொல்லாமல் எப்படி சொல்வது?" என்று கேட்ட திக்விஜய் சிங், "அன்னா, தனக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருக்கிறது என்பதை ஒப்பு கொள்ள ஏன் மறுக்கிறார்?" என்றார். "அன்னாவோ தன் போராட்டத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இல்லை என்கிறார். கோவிந்தச்சார்யாவோ அன்னாவின் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 20 சதவிகிதம் சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார். இரண்டில் ஒரு கருத்து தான் சரியாக இருக்கும். அது எது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது" என்றும் திக்விஜய் சிங் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக