தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.9.11

தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா பதவி ஏற்றார்

சென்னை, செப். 1  தமிழகத்தின் புதிய கவர்னராக ரோசய்யா நேற்று பதவி ஏற்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக கவர்னராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய கவர்னர் நியமிக்கப்படாத
நிலையில் அவர் அந்தப்
பதவியில் தொடர்ந்து நீடித்தார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கே.ரோசய்யா தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கவர்னர் மாளிகை விழாக் கோலம் பூண்டது.
கவர்னர் மாளிகை வளாகத்தில் திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு, விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடைக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் மாலை சரியாக 4.15 மணிக்கு வந்து அவர் இருக்கையில் அமர்ந்தார். கவர்னரின் செயலாளர், மெய்க்காப்பாளர்கள், முதல்-அமைச்சரின் செயலாளர் மற்றும் பொதுத்துறை செயலாளர் ஆகியோர் விழா மேடையின் பின்வரிசை இருக்கையில் அமர்ந்தார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள கே.ரோசய்யாவும் பதவியேற்பு விழா மேடைக்கு வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
அதன் பிறகு தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் சுருக்கமாக இசைக்கப்பட்டது. தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, தமிழக கவர்னராக கே.ரோசய்யா நியமிக்கப்பட்டது குறித்த ஜனாதிபதியின் உத்தரவை படித்தார். பின்னர் கவர்னராக பொறுப்பேற்க வருமாறு ரோசய்யாவை அவர் அழைத்தார். அதைத்தொடர்ந்து ரோசய்யாவுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கவர்னராக பதவியேற்றதும் அதற்கான உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டார். அதே நேரத்தில் தலைமை நீதிபதியும் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டார். அந்தப் படிவங்களை பொதுத்துறை செயலாளர் பெற்றுக் கொண்டார். காவலர் இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பின்னர், கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தலைமை நீதிபதியும் மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதையடுத்து கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவைத் தலைவரையும், அமைச்சர்களையும் அறிமுகப்படுத்தினார். தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் ஐகோர்ட்டு நீதிபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். கவர்னர் ரோசய்யாவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். 15 நிமிடங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இந்த விழாவுக்குப் பிறகு தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் சென்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில், தமிழக அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழா முடிந்ததும், பேட்டரி காரில் கவர்னர் மாளிகையை சுற்றிப் பார்த்த கவர்னர் ரோசய்யா, கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உங்கள் எல்லோருக்கும் வணக்கம். தமிழக கவர்னராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1953-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கும், ஆந்திராவுக்கும் சென்னைதான் தலைநகராக இருந்தது. அப்போதே எனது அரசியல் பிரவேசம் தொடங்கி விட்டது. அன்றிருந்த மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் எனக்கு ஊக்கம் அளித்தனர்.
தமிழ்நாடு ஒரு பெரிய மாநிலம். இந்த மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றதை எனது அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். தமிழ் மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நான் எப்போதும் அனைவருக்கும் உதவியாக இருப்பேன்.
நேற்று வரை தீவிர அரசியல்வாதியாக இருந்தேன். இன்று (நேற்று) மாலை 4.22 மணிக்குப் பிறகு அரசியல்வாதியாக இல்லாமல் தமிழக கவர்னராகிவிட்டேன். தமிழ்நாடு மாநிலத்திற்கு ஒரு ஆலோசகராகவும், நல விரும்பியாகவும் இருப்பேன். அரசியலைமைப்பு சட்டப்படி தமிழக அரசு செயல்படுவதை உறுதி செய்வதே எனது பணியாகும். தமிழக கவர்னர் என்கிற முறையில் எனது கடமையை சட்டப்படி சரிவர செய்வேன்.
1952-ம் ஆண்டு முதல் இன்று வரை பத்திரிகையாளர்களுடன் நட்புடன் இருந்து வருகிறேன். அப்போதெல்லாம் தினமும் 4 முதல் 5 பத்திரிகைகள் வரை படித்தேன். இப்போது தினமும் 10 பத்திரிகைகள் படிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். தமிழ் கொஞ்சம், கொஞ்சம் தெரியும். இனிமேல் தமிழ் கற்றுக் கொள்வேன். அதன் பிறகு உங்களுடன் நன்றாக தமிழ் பேச முயற்சி செய்வேன். தேவைப்படும் போதெல்லாம் உங்களை அழைத்து கலந்துரையாடுவேன். மீண்டும் உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கவர்னர் ரோசய்யா கூறினார்.

0 கருத்துகள்: