தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.9.11

திரிபோலியில் கடாபி இல்லாத மகிழ்ச்சியுடன் 'ஈத் பெருநாள்' கொண்டாட்டம்

திரிபோலி, செப். 2-  லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள 'தியாகிகள் சதுக்கத்தில்' நேற்று அந்நாட்டு மக்கள் கூடி, 'ஈத் பெருநாளை' மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுக்கால அடக்குமுறை ஆட்சி ஒழிந்ததால், இந்தப் பெருநாள் மேலும், மகிழ்ச்சி அளித்ததாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், இடைக்கால அரசின், நான்கு நாள் கெடுவை கடாபி நிராகரித்துள்ளார்.
திரிபோலியில் கடாபி இருந்தபோது
, 'கிரீன்' சதுக்கம் என அழைக்கப்பட்ட சதுக்கம், எதிர்ப்பாளர்கள் கைப்பற்றிய பின், பழைய பெயரான 'தியாகிகள் சதுக்கம்' என்று பெயர் மாற்றப்பட்டது. நேற்று 'ஈத்' பெருநாளை முன்னிட்டு, அச்சதுக்கத்தில் நகரின் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தொழுகை நடத்தினர். இந்த பெருநாளில் கடந்த 41 ஆண்டுகளாக லிபியாவை ஆண்ட, கடாபி இல்லாதது அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரிவித்தனர்.
"கடந்த 41 ஆண்டுகளில் இந்த நாள்தான், மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். அடக்குமுறை ஆட்சி ஒழிந்ததை, சந்தோஷமாகக் கொண்டாடுவதற்காக இங்கு வந்துள்ளோம்" என ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள கடாபியின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் நேற்று விடுத்த அறிக்கையில், "இறையாண்மை உள்ள ஒரு நாடு, ஆயுதக் கும்பல் ஒன்றின் கெடுவை ஏற்காது. இடைக்கால அரசு அமைப்பது குறித்து, கடாபி தன் மகன் சாடி மூலம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
லிபியாவில் அமைதியை நிலைநாட்ட, ஐ.நா., தனது அமைதி படையைக் கொண்டு வருவது குறித்து, ஐ.நா.,வுக்கான லிபியா துணைத் தூதர் இப்ராகிம் டப்பாசி கூறுகையில், "லிபியாவில் நடப்பது உள்நாட்டுச் சண்டையோ, இரு பிரிவினருக்கிடையிலான மோதலோ அல்ல. சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் தொடுத்துள்ள போர். அதனால் லிபியா விவகாரம் சிறப்பு வாய்ந்த தனியான விவகாரம். இங்கு ஐ.நா., உள்ளிட்ட எந்த ஒரு அன்னியப் படைகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
லிபியாவில் அரசு இயங்குவதற்கு நிதி தேவைப்படுவதால், பிரிட்டனில் முடக்கி வைக்கப்பட்ட, கடாபியின் சொத்துகளில், 1.55 பில்லியன் டாலர் கரன்சியை, ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் விடுவித்துள்ளது. எனினும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள, 8.6 பில்லியன் டாலர் சொத்துகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

0 கருத்துகள்: