கராச்சி:பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் தொடரும் அரசியல் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 90-ஐ தாண்டியுள்ளது. கலவரம் தொடரும் நகரத்தில் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாண அரசு வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உரங்கியில்
கஸ்பா காலனியில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பேருந்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஸஈத் மிர்ஸா தெரிவித்துள்ளார். பீம்புராவில் நடந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.உருது மொழி பேசும் நபர்களின் ஆதிக்கமுடைய முத்தஹிதா குவாமி மூவ்மெண்டும் (எம்.க்யூ.எம்) பஷ்தூன் மொழி பேசும் மக்களின் ஆதிக்கமுடைய அவாமி நேசனல் பார்டிக்கும் (எ.என்.பி) இடையே நடந்த இனத்துவேஷம் தான் மோதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
வியாபார நிறுவனங்களையும், கடைகளையும் நிர்பந்தமாக மூடவைப்போரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கலவரம் பாதித்த பகுதிகளுக்கு சென்ற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் நகரத்தில் மேலும் 1000 ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.
எம்.க்யூ.எம் தலைவர் அல்தாஃப் ஹுஸைன் மற்றும் அவாமி நேசனல் பார்டி தலைவர்களுடன் நகரத்தில் அமைதியை மீண்டும் நிலைநிறுத்த அமைச்சர் கோரிக்கை விடுத்தார். வெள்ளிக்கிழமை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் உருது மொழி பேசும் முஸ்லிம்களாவர். கராச்சியில் கரதர், உரங்கி, நியூ கராச்சி ஆகிய இடங்கள் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வன்முறை தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் 62 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து வெடிமருந்துகளும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. அதே வேளையில், கராச்சியில் நேற்று எம்.க்யூ.எம் நடத்தவிருந்த கண்டன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக