தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.11

ஜப்பானின் இரண்டாவது அணு உலையில் வெடிப்பு


டோக்கியோ ஜப்பானின் புகுசிமா டாய்ச்சி அணுசக்தி நிலையத்தின் இரண்டாவது உலையும் வெடித்தது. இதனால் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாவது அணு உலை வெடிப்பு காரணமாக 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளியன்று நிகழ்ந்த கோர பூகம்பம் மற்றும் நெஞ்சை உறைய வைக்கும் பயங்கர சுனாமி அந்நாட்டின் வரலாறு காணாத சேதத்துக்குக் காரணமாகியுள்ளது. செண்டாய் உள்ளிட்ட 5 நகரங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளன. இந்த நிலையில் இன்று மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ச்சியான இந்த இயற்கை சீற்றம் அந்நாட்டின் அணு உலைகளை ஆட்டம்காண வைத்துள்ளது.
ஏற்கெனவே இந்த நாட்டின் 5 முக்கிய அணுஉலைகள் ஆபத்தில் இருப்பதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் முதல் அணு உலை சனிக்கிழமை வெடித்தது. இந்த வெடிப்பின் துகள்கள் டோக்கியோ வரை பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பீதியிலிருந்து மக்கள் மீளும் முன், புகுசிமா டாயிச்சி அணுசக்தி நிலையத்தின் இரண்டாவது அணுஉலையில் இன்று காலை ஹைட்ரஜன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனை ஜப்பான் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பு காரணமாக 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வெடிப்புக்குள்ளான முதல் அணுஉலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவு 4 புள்ளிகளைத் தாண்டியுள்ள நிலையில், இந்த இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்துள்ளது மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அணு உலையிலிருந்து பெரும் புகையுடன் அணுச் சிதைவு துகள்கள் காற்றில் பரவ ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.  ஆனாலும், கதிர்வீச்சு அளவு அபாய கட்டத்துக்குச் செல்லவில்லை, கட்டுப்பாட்டில் உள்ளது என ஜப்பான் அறிவித்துள்ளது.
அணுஉலைகளின் அருகாமைப் பிரதேசங்களில் வசித்தவர்களில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளைக் காலி செய்துகொண்டு டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அணுசக்தி நிலையங்களிலிருந்து தொடர்ந்து அபாய அறிவிப்புக்கான சைரன் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பானில் இன்று காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: