தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.11

ஜப்பானுக்கு மேலும் ஒரு சோதனை: எரிமலை வெடித்தது


டோக்கியோ, சுனாமி, பூகம்பத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ள ஜப்பானில் நேற்று எரிமலை வெடித்து சிதறியது. 4 கி.மீ. உயரத்துக்கு பாறைகள் பறந்தன.
ஜப்பானில் கடந்த 11-ந் தேதி அன்று 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டு அந்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தலைநகர் டோக்கியோவில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள புகுஷிமா அணுஉலையில் ஒரு பகுதி வெடித்து கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டு அணு உலைகள் வெடிக்கும் நிலையில் இருக்கின்றன.
உலகம் முழுவதும் ஜப்பான் மீது அனுதாபம் தெரிவித்து வரும் சூழ்நிலையில், நேற்று மேலும் ஒரு சோதனை ஏற்பட்டது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷின்மவுடாகே என்ற எரிமலை நேற்று பிற்பகலில் வெடித்து சிதறியது.
பூகம்பம் மற்றும் சுனாமி ஆகியவை ஏற்பட்ட மியாகி மாகாணம், ஜப்பானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. தற்போது, வெடித்துச் சிதறிய எரிமலையானது, ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிரிஷிமா நகருக்கு அருகே இருக்கிறது. 52 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, கடந்த ஜனவரி மாதத்தில் லேசாக புகையை கக்கியது. அதன் பிறகு, புகை குறைந்து விட்டது. மார்ச் 1-ந் தேதி முதல் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது. எனினும், எரிமலை வெடிப்பதற்கான 3-ம் எண் அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக 5-ம் எண் அறிவிப்பு வரை வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து, ஷின்மவுடாகே எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டனர். எரிமலை முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, யாரும் அருகில் நெருங்காதவாறு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகலில் மிக ஆக்ரோசமாக அந்த எரிமலை வெடித்து சிதறியது. 1421 மீட்டர் உயரமான அந்த எரிமலையில் இருந்து 4 கி.மீ. உயரத்துக்கு வானத்தில் பாறைகளும், சாம்பல்களும் பறந்தன. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.
9 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்துக்கும், எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில், 52 ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஷின்மவுடாகே எரிமலை, கடந்த ஜனவரி மாதத்தில் முதன் முறையாக லேசாக புகையை கக்கியதையும், தற்போது பூகம்பம் ஏற்பட்ட பிறகு வெடித்து சிதறியதையும் புவியியல் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்: