லண்டன் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசரப் மீது லண்டனில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் ஷூவை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முசரப் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது லண்டனில் இருக்கும் முசரப், கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் எனும் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் இக்கட்சியின் பொதுக்கூட்டம் லண்டனில் உள்ள வால்தாமஸ்டவ் மாவட்டத்தில் நடந்தது. இதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட முசரப் பேச துவங்கினார் அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் ஒரு வாலிபர் திடீரென தனதுகாலில் இருந்து ஷூவை கழற்றி மேடைமீது வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஷூ முசரப் மீது விழவில்லை, மேடையின் முன்பகுதியில் விழுந்தது. உடனடியாக பாதுகாவலர்கள் வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்ததாக ஜியோ செய்தி சேனல் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். எனினும் கைது செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக