தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.11

இந்திய ஊடகங்களா? இந்துத்துவா கேடயங்களா?

கசாப் என்ற பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்ட பெயர். மும்பையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவன்தான் கசாப். சரி இது அப்படியே இருக்கட்டும். ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரை இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? மாலேகன் குண்டு வெடிப்பு சம்பவம் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க வாயப்பு இருக்கிறது? மேலே குறிப்பிட்ட அந்தப் பெயரும், அந்த சம்பவமும், திரளான மக்களுக்கு சென்றடையாத செய்திகளாகவே இன்றளவும் உள்ளன.

2007, பிப்ரவரி 18ல் தில்லி – லாகூர் இடையிலான சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு

வெடித்தது. இந்த சம்பவத்தில் 68 பேர் உயரிழந்தனர். 68 அப்பாவி பொதுமக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்து செயல்பட்டது ‘இந்து’ தீவிரவாத அமைப்புகள். அந்த ‘இந்து' தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்தான் சாத்வி பிரக்யா என்பவரும், அவரது கூட்டாளியான சுனில் ஜோஸி என்பவரும். ‘இந்து’ தீவிரவாதம் என்கிற வார்த்தையே நம் மக்களுக்கு புதிய சொல்லாகத்தான் இருக்கும். ஏனென்றால், இந்து தீவிரவாத அமைப்பு, இந்து தீவிரவாதிகள் போன்ற செய்திகளை நமது ஊடகங்கள் நமக்கு எடுத்துச் சொல்வதில்லை. சொல்ல விரும்புவதுமில்லை. எழுத்து ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் சினிமா என மக்களிடம் நேரடியாக பேசும் எந்த அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பற்றி மக்களுக்கு துளி அளவும் சொன்னதில்லை. அதே நேரத்தில் இசுலாமிய தீவிரவாதம், தீவிரவாதிகள் என்றாலே இசுலாமியர்கள் என்கிற சித்தரிப்பை ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

ஊடகம் என்பது இந்திய அளவில் பார்ப்பன, பனியாக்களின் தலைமையில் செயல்படும் அமைப்பாகவே இருக்கிறது. இந்திய வல்லாதிக்க கூறுகளான, தமிழ் இனம் போன்ற தேசிய இனங்களின்' மீதான ஒடுக்குமுறை, இசுலாமியர்கள் மீதான பொய் சித்தரிப்பு, தரகு தேசிய முதலாளிகளுக்கான ஆதரவு மனநிலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தியல், பிராந்திய உணர்வுகள் கொண்ட மாநில கட்சிகளை சிறுமைப்படுத்துதல் என அனைத்து கருத்தாக்கங்களையும் பெருந்திரளான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைத்தான் தினமலர், தினமணி, தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, இது போன்ற ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. சமூக நீதிக்கு முரணான இந்திய தேசிய கட்டமைப்பை, இந்துத்துவா உணர்வை, இந்தி மொழி திணிப்பை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் பொது புத்தியாக உருவாக்கும் அரசியலைத்தான் இந்த ஊடகங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன.

மாலேகான் குண்டு வெடிப்பு, அஜ்மீர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு போன்ற தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியது, பழனிபாபா படுகொலை என இந்துத்துவா அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்களை இதுவரை எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டியதில்லை. 1984-ல் விஷ்வ இந்து பரிஷத் என்கிற ஹிந்து தீவிரவாத அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு தான் இந்திய அளவில் மதக்கலவரங்களும், வன்முறை தாக்குதல்களும் அதிகமாக பரவலாகின. குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை இந்நாட்டில் துவங்கி வைத்த இந்த்துவ பார்ப்பனிய அமைப்புகளை தீயசக்திகள் என்கிற பிரச்சாரத்தை எந்த ஊடகங்களும் செய்ததில்லை. தீவிரவாத அமைப்புகள் என்றால், தமிழ் இன, தேசிய இன விடுதலை அமைப்புகள், மற்றும் இசுலாமிய அமைப்புகள்தான் என்பதை பொதுமக்கள் மத்தியில் ஆழமாகப் பதிவு செய்வதில் அதிகமான பங்கை இந்த ஊடகங்கள் வகிக்கின்றன.

நன்றி : ஜீவசகாப்தன், நன்றி: கீற்று

0 கருத்துகள்: