தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.11

எகிப்திலிருந்து முபாரக் குடும்பத்தினர் வெளியேற தடை


கெய்ரோ, மார்ச். 2 எகிப்தில், அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்த பொதுமக்கள் ஓட்டெடுப்பு, பார்லிமென்ட் மற்றும் அதிபர் தேர்தல் நடக்கும் தேதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் முபாரக் குடும்பத்தினர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எகிப்தில், சமீபத்தில் அரசியல் சாசனத்தின் 11 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதிபரின் பதவிக் காலத்தைக் குறைப்பது, அவசர நிலைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள்
உள்ளிட்ட முக்கியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து, முன்பு முபாரக்கை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கூட்டணி என்ற அமைப்பின், ஜாயத் எல் எலய்லி என்பவர் இருநாட்கள் முன்பு, ராணுவ உயர்மட்டக் கவுன்சிலின் மூன்று உறுப்பினர்களைச் சந்தித்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், "அரசியல் சாசனத் திருத்தம் பற்றிய பொது ஓட்டெடுப்பு மார்ச் 19ம் தேதியும், பார்லிமென்ட்டுக்கான தேர்தல் ஜூன் மாதமும், அதில் இருந்து ஆறு வாரங்கள் கழித்து அதிபர் தேர்தலும் நடக்கும் என்று என்னிடம் கூறினர்" என்று தெரிவித்தார். எனினும், இதுகுறித்து ராணுவக் கவுன்சில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
இதற்கிடையில், சமீபத்தில், முன்னாள் அதிபர் முபாரக்கின் மனைவி சூசன்னே மற்றும் இளைய மகன் கமால் இருவரும், தற்போது முபாரக் தங்கியுள்ள சினாய் தீபகற்பத்தின் ஷரம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் ஒன்றின் மூலமாக, வெளிநாடு செல்ல முற்பட்டனர். அப்போது எகிப்து அதிகாரிகள், அரசின் அனுமதியின்றி வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்று தடுத்துவிட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம், எகிப்து அரசுத் தரப்பு வக்கீல், முபாரக் மற்றும் அவரது குடும்பத்தார் வெளிநாடு செல்லத் தடை விதித்தும், எகிப்தில் உள்ள முபாரக்கின் சொத்துக்களை முடக்கியும், அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

0 கருத்துகள்: