லிபியாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக வெடித்துள்ள புரட்சியில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால், லிபியாவில் வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களின் நிலைமை குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. எனவே, அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வர முடிவு செய்துள்ளது. இது தவிர, பக்ரைன் நாட்டில் மூன்றரை லட்சம் இந்தியர்களும் ஏமனில் 14 ஆயிரம் இந்தியர்களும் உள்ளன. அந்த நாடுகளிலும் கலவரம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு மந்திரி
எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது:-லிபியா, ஏமன், பக்ரைன் ஆகிய நாடுகளின் நிலைமைகளை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. அந்த பகுதியின் சூழ்நிலை குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டமும் நடைபெற்றது. அங்குள்ள இந்திய தூதர்களுடன் தனிப்பட்ட முறையில் நான் தொடர்பு கொண்டு வருகிறேன். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தியர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேர உதவி மையமும் செயல்படுகிறது. லிபியாவில் உள்ள இந்தியர்களை தரை வழியாகவோ, வான் வழியாகவோ, கடல் வழியாகவோ அழைத்து வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் அங்குள்ள இந்திய தூதரகங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் மற்றும் கப்பல்கள் போன்றவை தயார் நிலையில் இருப்பதாக வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
லிபிய தலைநகர் திரிபொலியில் உள்ள நமது இந்திய தூதர் மணிமேகலையிடம் பேசினேன். நம்முடைய விமானம் மற்றும் கப்பல்கள் லிபியாவுக்கு செல்ல அனுமதி கேட்டு காத்திருப்பதாக அவர் கூறினார். எகிப்துக்கு ஒரு கப்பல் சென்று விட்டது. லிபியாவின் கிழக்கு பகுதியில் இருந்து விரைவாக எகிப்து வந்து விடலாம். லிபிய தலைநகர் திரிபொலிக்கு வழக்கமாக சென்று திரும்பும் அனைத்து விமானங்களும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. லிபியா நகரங்களில் உள்ள இந்தியர்களுடன் தூதர் மணிமேகலை தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். இவ்வாறு நிருபமா ராவ் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக