தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.2.11

பஸ் தின ஊர்வலத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்


சென்னை, பிப். 24- சென்னையில் நேற்று நடந்த பஸ் தின ஊர்வலம் பயங்கர கலவரமாக வெடித்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் துணை கமிசனர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 35 போலீசாரும், பொதுமக்கள் 6 பேரும் காயமடைந்தனர்.
சென்னையில் போலீஸ் தடை
உத்தரவை மீறி உயர் நீதிமன்ற கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் பஸ் தின விழாவை பஸ்களில் ஊர்வலமாக சென்று கொண்டாடி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகுகிறார்கள். சென்னையில் இது அன்றாட காட்சியாக அரங்கேற்றப்படுகிறது. நேற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15பி மாநகர பஸ்சில் பஸ் தின விழா கொண்டாடப்போவதாக அறிவித்திருந்தனர். முதலில் சென்னை பாரிமுனையில் இருந்து மாணவர்கள் 15பி பஸ்சில் ஊர்வலமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. வழி நெடுக பாரிமுனையில் இருந்து ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையிலும், கீழ்ப்பாக்கம் பகுதியிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இறுதியில் பகல் 11 மணி அளவில் சுமார் 300 மாணவர்கள் எழும்பூர் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் கூடினார்கள். முதலில் அவர்களுக்கு பஸ்களை வழங்க மாநகர போக்குவரத்துக்கழகம் மறுத்தது. ஆனால் போலீசாரிடம் பேசி ஏற்பாடு செய்து அமைதியாக செல்வோம் என்று மாணவர்கள் உறுதி கொடுத்ததால் 3 பஸ்கள் வழங்கப்பட்டன. அந்த 3 பஸ்களிலும் மாணவர்கள் ஏற்றப்பட்டு துணை போலீஸ் கமிசனர் லட்சுமி, உதவி கமிசனர் விஜயராகவன், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் போலீஸ் படையோடு மாணவர்கள் சென்ற பஸ்களுக்கு பின்னால் பாதுகாப்புக்காக சென்றனர். மாணவர்களும் ஆட்டம் பாட்டத்தோடு கட்டுக்கோப்பாக சென்றனர். சில குறும்புக்கார மாணவர்கள் அவ்வப்போது சேட்டையில் ஈடுபட்டார்கள். போலீசார் அதை சமாளித்தபடி சென்றனர். பகல் 12.30 மணி அளவில் மாணவர்கள் ஊர்வலமாக சென்ற பஸ்கள் பச்சையப்பன் கல்லூரி வாசலை சென்றடைந்தது. மாணவர்கள் நடனமாடியபடியும், உற்சாகமாக கோசம் போட்டபடியும் ஆட்டம் பாட்டத்தோடு பஸ்களை விட்டு இறங்கினார்கள். ஒரு பகுதி மாணவர்கள் அமைதியாக கல்லூரிக்குள் சென்று விட்டனர்.
ஆனால் மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரிக்குள் போக மறுத்து தொடர்ந்து கல்லூரி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். "ஊர்வலம்தான் நல்லபடியாக முடிந்து விட்டதே பின்னர் ஏன் இங்கு நிற்கிறீர்கள்? அமைதியாக கலைந்து கல்லூரிக்கு செல்லுங்கள்" என்று போலீசார் திரும்பத் திரும்ப கூறினார்கள். ஆனால் மாணவர்கள் எங்களை சந்தோசமாக பஸ் கூரையில் நடனமாடுவதற்கும், ரோட்டில் நடனமாடி வருவதற்கும் எங்களை அனுமதிக்கவில்லை. பஸ் தினம் கொண்டாடுவது எங்களது உரிமை. எவ்வளவோ ஊர்வலம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அப்போது மட்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லையா? வருடத்தில் ஒரு நாள் நாங்கள் சந்தோசமாக இந்த விழாவை கொண்டாடுகிறோம். பொதுமக்கள் எங்களுக்காக கஷ்டத்தை பொறுத்துக்கொள்வார்கள். எங்களை சந்தோசமாக விழாவை கொண்டாட போலீசார் மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்? என்று வாக்குவாதம் செய்தனர்.
உடனே துணை கமிசனர் லட்சுமி இப்போது நாங்கள் ஏற்பாடு செய்துதானே நீங்கள் பஸ்சில் ஊர்வலமாக வந்தீர்கள், நீங்கள் பஸ்சில் ஊர்வலமாக வருவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் ரோட்டில் நடனமாடி சென்று பஸ் நிறுத்தங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பெண்களை கிண்டல் செய்கிறீர்கள், வழியில் இருக்கும் கடைகளை அடைக்க சொல்லி மிரட்டுகிறீர்கள், இது எந்த வகையில் நியாயம்? இது சட்டத்திற்கு புறம்பானது அல்லவா? அதனால்தான் நாங்கள் நடனமாடி செல்வதற்கு அனுமதி மறுக்கிறோம். ஒருநாள் என்றால் பரவாயில்லை. கடந்த 15 நாட்களாக ஒவ்வொரு பிரிவினராக ஊர்வலம் செல்கிறீர்கள். நாங்களும் பொறுமையோடு உங்களை காவல் காத்து வருகிறோம். ஆனால் உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு செய்யப்படுவதாலும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யப்படுவதாலும் பஸ் தின ஊர்வலத்திற்கு ஏன் அனுமதிக்கிறீர்கள் என்று உயர் நீதிமன்றமே போலீசை கண்டித்துள்ளது. உயர் நீதிமன்றத்திற்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டவர்கள். இருந்தாலும் மாணவர்களின் சந்தோசத்திற்காக பஸ்களை ஏற்பாடு செய்து உங்களை ஊர்வலம் வருவதற்கு அனுமதித்துள்ளோம் என்று மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னார்.
இந்த நேரத்தில் திடீரென்று துணை கமிசனர் லட்சுமி மீது மாலைகளும், மதுபாட்டில்களும் வீசப்பட்டன. மாணவர்களில் சிலர் அவரை நோக்கி தள்ளியபடி வந்தார்கள். துணை கமிசனர் தாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உதவி கமிசனர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் குறுக்கே புகுந்து மாணவர்களை தடுத்தார்கள். அப்போது அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. டியூப் லைட்களையும் அவர்களை நோக்கி வீசினார்கள். இதில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு தலையில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது. அவர் ரத்தம் கொட்ட, கொட்ட மாணவர்களோடு போராடியபடி இருந்தார். உதவி கமிசனர் விஜயராகவனும் கையில் விரல்களில் காயம் ஏற்பட்டது. அப்போது ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. போலீசார் மீது வீசப்பட்ட கற்கள் ரோட்டில் சென்ற வாகனங்கள் மீது விழுந்தன. ஒரு பஸ் மீதும் கல்வீசப்பட்டது. இதில் வாகனங்கள் சேதமடைந்தன. அதில் பயணம் செய்த பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் இருந்து சரமாரியாக கற்களும், செருப்புகளும், உடைந்து போன டியூப் லைட்களும், இரும்பு பைப்களும் வீசப்பட்டன.
நிலைமை மோசமானதால் போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தினார்கள். மாணவர்களை லத்தியால் அடித்து விரட்டியபடி சென்றனர். போலீசார் விரட்ட ஆரம்பித்ததும் கல்லூரி முன்பு திரண்டிருந்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு உள்ளே ஓடினார்கள். கல்லூரி வளாகத்திற்குள் சுமார் 50 அடி தூரம் இரண்டு பக்கங்களிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அந்த 50 அடி தூரம் மட்டும் போலீசார் விரட்டிச் சென்றனர். மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்திற்கு போய் விட்டனர். துணை கமிசனர் லட்சுமியும், உதவி கமிசனர் விஜயராகவனும், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியும் போலீஸ் படையினர் அத்துமீறாமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள். துணை கமிசனர் லட்சுமி போலீஸ் படைக்கு நேரடியாக தலைமை தாங்கியிருந்தார். மாணவர்களின் தாக்குதலை நாம் தாங்கிக்கொள்வோம். அவர்களை யாரும் லத்தியால் அடிக்கக் கூடாது என்று ஆவேசமாக கத்தியபடி போலீஸ் படையை கட்டுப்படுத்தினார். இதனால் போலீஸ் படையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை காயப்படுத்தவில்லை. சத்தம் போட்டபடி விரட்டி சென்றார்கள். போலீசார் 50 அடி தூரம் விரட்டி செல்வதும், அதன் பிறகு வெளியே வருவதும், போலீசார் வெளியே வந்தவுடன் மாணவர்கள் மீண்டும் திரண்டு வந்து கற்களையும், கட்டைகளையும் வீசுவதும் தொடர்ந்து அங்கு ஒரு போர்க்களக் காட்சி போல நடந்து கொண்டிருந்தது.
கல்லூரி வாசல் முன்பு கற்களும், செருப்புகளும், இரும்பு பைப்களும், டியூப் லைட்களும் சிதறி கிடந்தன. தொடர்ந்து கற்கள் வீசப்பட்டதால் ஏராளமான போலீசார் தலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஆம்புலன்ஸ் வேனில் ஆஸ்பத்திரிக்கு ஏற்றி செல்லப்பட்ட வண்ணம் இருந்தனர். பிற்பகல் 12.45 மணியில் இருந்து 2.30 மணி வரை இந்த போர்க்களக் காட்சி தொடர்ந்து அரங்கேறியபடி இருந்தது. கல்லூரி வளாகத்தில் இருந்து கற்கள் பறந்து, பறந்து வந்து போலீசார் மீது விழுந்தன. போலீசார் இரும்பு தடுப்புகளை கொண்டு தாங்கியபடி இருந்தனர்.
நீண்ட போர் முடிந்த பிறகு கல்லூரி முதல்வர் சேகர் ஆசிரியர்களோடு அங்கு வந்தார். அவர் மாணவர்களை சமாதானப்படுத்தி பார்த்தார். ஆனால் மாணவர்கள் கேட்டபாடில்லை. அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்து போலீசாரை கலைந்து செல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு துணை கமிசனர் லட்சுமி மாணவர்களை கற்கள் வீசுவதை நிறுத்தச் சொல்லுங்கள். அமைதியாக கல்லூரியை விட்டு வெளியே போகச் சொல்லுங்கள். நான் உறுதி கொடுக்கிறேன். அவர்கள் கலைந்து செல்லும் போது நாங்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம். பிரச்சினை இத்தோடு முடியட்டும். ஆனால் தொடர்ந்து கற்கள் வீசப்படுவதால் ரோட்டில் செல்லும் பொதுமக்களும், வாகனங்களும் தாக்கப்படுகின்றன. இதை நாங்கள் எப்படி வேடிக்கை பார்க்க முடியும் என்று கல்லூரி முதல்வரிடம் கேட்டார். அதன் பிறகு கல்லூரி முதல்வர் சேகர் மாணவர்களை பார்த்து பேசுவதும், அதன் பிறகு போலீஸ் அதிகாரிகளை சந்திப்பதுமாக அங்கும், இங்கும் வந்து போய் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் மத்திய சென்னை இணை கமிசனர் சாரங்கன் அங்கு போலீஸ் படையோடு வந்து சேர்ந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் உடனடியாக வரமுடியவில்லை என்று அவர் கூறினார். அவர் கல்லூரி முதல்வர் சேகரை அழைத்து கடுமையாக எச்சரித்தார். கல்லூரி முதல்வரிடம் அவர் கூறும்போது, துணை கமிசனர் லட்சுமியை மாணவர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி இழிவாக திட்டியுள்ளனர். மது பாட்டில்களை வீசியிருக்கிறார்கள். தண்­ணீர் பாட்டில்களையும், பால் பாக்கெட்டுகளையும் வீசியுள்ளனர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை ஒரு பெண் என்றும் பார்க்காமல் கற்களை வீசி தாக்கி காயப்படுத்தியுள்ளனர். கல்வீச்சில் போலீஸ் தரப்பில் உதவி கமிசனர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். டி.பி. சத்திரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாருக்கும் வயிற்றில் கல் எறி பட்டுள்ளது. 35-க்கும் மேற்பட்ட போலீசார் ரத்தக் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள். கடந்த ஒரு வாரமாக மாணவர்களின் பஸ் தின ஊர்வலத்தை அனுமதித்து நாங்கள் பொறுமை காத்திருந்தோம். இதற்கு மேலும் நாங்கள் எப்படி பொறுமை காக்க முடியும். இவ்வளவு நடந்த பிறகும் மாணவர்கள் மீது பெரிய அளவில் தடியடி நடத்தப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி அவர்களுடைய தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம். மாணவர்களை நீங்கள் கட்டுப்படுத்துங்கள் அல்லது எங்கள் கையில் பொறுப்பை ஒப்படையுங்கள், நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். 15 நிமிடம் கால அவகாசம் தருகிறேன். அதற்குள் மாணவர்களை கட்டுப்படுத்துங்கள் என்று கண்டிப்பாக கூறினார். அதன் பிறகு ஜெயக்குமார் என்ற மாணவரை போலீசார் கைது செய்து வைத்துள்ளார்கள் என்றும், அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர் சேகர் கேட்டுக்கொண்டார். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். முதலில் மாணவர்களை கலைந்து போகச் சொல்லுங்கள் என்று சாரங்கன் கூறினார்.
இதையொட்டி கல்லூரி முதல்வர் மீண்டும் மாணவர்களோடு சமாதானப் பேச்சு நடத்தினார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு மேல் போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் சுமார் 600 பேர் கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தார்கள். போலீசார் அவர்களை எதுவும் செய்யவில்லை. மாணவர்கள் கலைந்து சென்ற பிறகு அந்த பகுதியில் பஸ் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. அதுவரை பஸ்கள் உள்பட வாகனங்கள் நியூ ஆவடி ரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். சுமார் 2 மணி நேரம் அந்த பகுதி ஒரு போர் நடந்தது போல போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் நடந்து முடிந்தது.
மாணவர்கள் கலைந்து சென்ற பிறகு அமைதி திரும்பிய போர்க்களத்தைப் போல அந்த பகுதி காணப்பட்டது. கல்லூரி வளாகத்திற்குள்ளும், கல்லூரி வாசல் முன்பு மெயின் ரோட்டிலும் கற்களும், செங்கல்களும் குவிந்து கிடந்தன. தொடர்ந்து துணை கமிசனர் லட்சுமி தலைமையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நின்றனர். காயமடைந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்ட 35 போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதிக காயம் பட்டவர்களுக்கு கட்டு போடப்பட்டது. லேசான ரத்த காயத்தோடு வந்தவர்களுக்கு சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. பொதுமக்களில் 6 பேர் காயம் அடைந்தனர். கூடுதல் கமிசனர் ஷகீல் அக்தர், இணை கமிசனர் சாரங்கன் ஆகியோர் காயமடைந்த போலீசாரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள். மாணவர்களுக்கும், போலீசாருக்கும் நடந்த இந்த மோதல் போருக்கு பிறகும் பஸ் தின ஊர்வலங்கள் இனிமேலும் அனுமதிக்கப்படுமா? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை முன்னால் நிறுத்தி வெளியில் உள்ள மற்ற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும், பச்சையப்பன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும், அது தவிர வெளியாட்களும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும், வெளியாட்கள் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எங்கள் கல்லூரி மாணவர்கள் நல்லவர்கள்தான். துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. மாணவர்களை நல்வழிப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்றும் இனிமேல் மாணவர்கள் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
நடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் போலீசாரை குறை சொன்னார்கள். நாங்கள் கட்டுப்பாட்டோடுதான் ஊர்வலமாக வந்தோம். ஆனால் போலீசார்தான் எங்களை கலைந்து போகச்சொல்லி பிரச்சினையை பெரிதாக்கினார்கள். மப்டி உடையில் வந்த போலீசார் சிலர் மாணவர்களை தாக்கியதால்தான் மாணவர்களும் திருப்பி கல்வீசி தாக்கினார்கள் என்று குறிப்பிட்டனர்.
நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்: