தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.11

முபாரக் ராஜினாமா: எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது


எகிப்து அதிபர் முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் கெய்ரோவில் இருந்து வெளியேறினார். ஆட்சி பொறுப்பை ராணுவம் கைப்பற்றியது.
எகிப்து நாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. கடந்த 18 நாட்களாக, தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்டிரியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு உரையாற்றிய அதிபர் முபாரக், தான் பதவி விலக போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற போராட்டக்காரர்கள் நேற்று லட்சக்கணக்கில் திரண்டு, அதிபர் மாளிகையையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால், உயிருக்கு பயந்த முபாரக் தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அதிபர் முபாரக் பதவி விலகியதாக, துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்ததாக அரசு தொலைக்காட்சி அல்-ஜசீரா நேற்று இரவு அறிவித்தது. இதைத்தொடர்ந்து முபாரக்கின் 30 ஆண்டு சர்வாதிகார ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாகவும் அறிவிப்பு வெளியானது.
சுலைமானின் அறிவிப்பை கேட்ட, பொதுமக்களின் கிளர்ச்சி வெற்றி கொண்டாட்டங்களாக மாறியது. நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நோபல் பரிசு வென்ற எல்பராடி, இதுகுறித்து கூறுகையில், எகிப்து மக்களுக்கு இந்த நாள் மிகச்சிறந்த ஒரு நாள். எகிப்து இப்போது விடுதலை அடைந்து விட்டது என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதன் காரணமாக முபாரக் பதவிவிலகியுள்ளார். இதனை நான் வரவேற்கிறேன். மிகவும் சிக்கலான இத்தருணத்தில் எகிப்தின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும், ஆனாலும் எகிப்து மக்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்

0 கருத்துகள்: