இஸ்லாமாபாத், பிப். 11- அணு ஆயுதங்களை தாங்கி சுமார் 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கவல்ல ஹட்ப்-7 (பாபர்) என்கிற நவீன ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை மூலம் இந்தியாவிலுள்ள இலக்குகளையும் தாக்க முடியும்.
ஏவுகணை அமைப்பின் செயல்பாட்டை மதிப்பிடுவதன் ஒரு பகுதியே இந்தச் சோதனை என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தச் சோதனை எங்கு நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தானின் முப்படை அதிகாரிகள் குழுவின் தலைவர் காலித் ஷமீம் முன்னிலையில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. நாட்டின் தாக்குதல் திறனை அதிகரிப்பதிலும், பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்த சோதனை ஒரு மைல்கல் என அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் என்று தெரிவித்த அவர், இந்த ஏவுகணைச் சோதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளையும் விஞ்ஞானிகளையும் அதிபரும், பிரதமரும் வெகுவாகப் பாராட்டினார்கள் என்றார்.
பாபர் ஏவுகணை நவீன ரக அல்லது சாதாரண வெடிபொருள்களைத் தாங்கி, மிகக் குறைந்த உயரத்தில் பறந்து சென்று, குண்டூசி முனை அளவுத் துல்லியத்துடன் இலக்கைத் தாக்கவல்லது. ராடாரின் கண்களுக்கும் இது சிக்காது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் குஷாப் என்ற இடத்தில் 4-வது அணுஉலைக்கூடம் கட்டும் பணி தொடங்கியது. இதன்காரணமாக அந்த நாடு மேலும் அதிகமான அணுஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும். இப்போதே அந்த நாட்டிடம் 100-க்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் இருக்கின்றன. இது மேலும் அதிகரிக்கும். இந்த அணுஉலைக்கூடத்தை சீனா கட்டிக்கொடுக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டு உள்ளன. குஷாப்பில் ஏற்கனவே 2 அணு உலைக்கூடங்கள் இருக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக