தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.2.11

காதலர் தின எதிர்ப்பை கைவிட்டது சிவசேனை


மும்பை, பிப். 15காதலர் தின எதிர்ப்பை சிவசேனை கைவிட்டுவிட்டது.காதலர் தின கொண்டாட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சி, இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்பைக் கைவிட்டதாக அதன் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தெரிவித்தார். இவர் சிவசேனை தலைவர் பால் தாக்கரேயின் பேரனாவார். தேர்தலில் இளம் தலைமுறையைக் கவர்வதற்காக காதலர் தின எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.
மும்பை மாநாகராட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு சிவசேனை அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்ப்பதை விட தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் பல உள்ளன. மேலும் கடந்த சில ஆண்டுகளாக காதலர் தின கொண்டாட்ட மோகமும் இளைஞர்களிடையே குறைந்து வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிவசேனையின் இளைஞர் பிரிவு அமைப்பாக செயல்படும் பாரதிய வித்யார்த்தி சேனையின் மாநில தலைவராக ஆதித்யா உள்ளார். மேலை நாட்டு கலாசாரம் என்று கூறி காதலர் தினத்தைக் கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சி, பிப்ரவரி 14-ம் தேதி பரிசுப் பொருள் விற்பனையகங்களைத் தாக்குவது, இளைஞர்களை மிரட்டுவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது.  இதனால் இக்கட்சி இளைஞர்கள் மத்தியில் மதிப்பிழந்தது. இதைப் போக்கும் வகையில் இப்போது எதிர்ப்பைக் கைவிட்டுள்ளது சிவசேனை. ரயில்வேயில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கட்சி ஈடுபடுவதாக அவர் மேலும் கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மும்பை நகராட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதனால் இளம் வாக்காளர்களை இழந்துவிடக்கூடாது என்பதால் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) ஒருபோதும் காதலர் தினத்தை எதிர்த்ததில்லை என்று அதன் சட்டப்பேரவை உறுப்பினர் நிதின் சர்தேசாய் குறிப்பிட்டார்

0 கருத்துகள்: