அல்ஜியர்ஸ்:அல்ஜீரியாவின் ஸ்தாபக அரசியல் தலைவரும், முதல் அதிபருமான அஹ்மத் பின் பெல்லா மரணமடைந்தார். அவருக்கு 95 வயது. தலைநகரான அல்ஜியர்ஸில் அவரது வீட்டில் வைத்து மரணம் நிகழ்ந்தது.அல்ஜீரியா சுதந்திரம் பெற்று 50-வது ஆண்டு விழா பூர்த்தியடைந்து சில தினங்களே கழிந்த நிலையில் அஹ்மத் பின் பெல்லாவின் மரணம் நிகழ்ந்துள்ளது.பிரான்சின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த அல்ஜீரியா,அஹ்மத் பின் பெல்லாவின் தலைமையில்
நடந்த சுதந்திர போராட்டம் காரணமாக 1962-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. பின்னர் நடந்த தேர்தலில் அஹ்மத் பின் பெல்லா அல்ஜீரியாவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரத்தில் அமர்ந்து சில ஆண்டுகளிலேயே ராணுவம் ஆட்சியை கவிழ்த்தது. பின்னர் அஹ்மத் பின் பெல்லா ராணுவத்தால் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
ஆட்சியில் இருக்கும் வேளையில் சோசியலிச கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட அஹ்மத் பின் பெல்லா, கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, எகிப்து முன்னாள் அதிபர் ஜமால் அப்துல் நாஸர் ஆகியோருடன் நல்லுறவு கொண்டிருந்தார்.
இஸ்லாமிஸ்ட் கட்சியான இஸ்லாமிக் சால்வேஷன் ஃப்ரண்ட் முனிசிபல் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அஹ்மத் பின் பெல்லா அரசியலுக்கு மீண்டும் திரும்பினார். டெமோக்ரேடிக் ஃபாரம் என்ற எதிர்கட்சியை உருவாக்கிய அவர் இஸ்லாமிக் சால்வேஷன் ஃப்ரண்டிற்கு பகிரங்க ஆதரவை தெரிவித்தார். இஸ்லாமிக் சால்வேஷன் ஃப்ரண்ட் வெற்றியை நோக்கி நகர்ந்த வேளையில் தேர்தலை ராணுவ அரசு ரத்துச்செய்தது. அஹ்மத் பின் பெல்லாவின் கட்சியும் தடைச் செய்யப்பட்டது.
அஹ்மத் பின் பெல்லாவின் மரணத்தின் மூலம் நவீன அல்ஜீரியா துணிச்சலான தலைவரை இழந்துவிட்டதாக அல்ஜீரிய அதிபர் அப்துல் அஸீஸ் புதஃப்லிகா கூறியுள்ளார். அஹ்மத் பின் பெல்லாவின் மரணத்தை தொடர்ந்து அரசு 8 தினங்கள் அதிகாரப்பூர்வ துக்கதினமாக அறிவித்துள்ளது.
நன்றி;தூதுஆன்லைன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக