தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.3.12

டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?

நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.   கடந்த பி ப்ரவரி 13ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் இல்ல த்துக்கு அருகேயுள்ள இஸ்ரேல் நாட்டுத் தூதரகத்தின் கார் வெடித்து தீப்பிடித்ததில், தூதரகத்தைச் சேர்ந்த பெ ண் அதிகாரி ஒருவர் உள்ளிட்டு 4 பேர் காயமடைந்தன ர்.  டீசலால் இயக்கப்படும் காரின் வாயு அழுத்த சிலி ண்டர்   வெடித்ததால் தீவிபத்து நேர்ந்ததாகவே
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போலீசார் ஊடகங்களிடம் கூறினர்.
இரான்
போலீசார் புலனாய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே, இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும், இக்குண்டு வெடிப்புக்கு இரானும் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கமும்தான் காரணம் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்ததோடு, இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அமெரிக்காவும், பிரிட்டனும் இத்தகைய பயங்கரவாதங்களை இரான் தூண்டிவிட்டு ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டின. மறுபுறம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை மறுத்து, இக்குண்டுவெடிப்புக்கு தாங்கள் காரணம் இல்லை என்று இரான் அறிவித்துள்ளது.
காந்தத்துடன் கூடிய ஸ்டிக்கர் மூலம் காரில் வெடிகுண்டை ஒட்டவைத்து, பின்னர் தொலைக் கட்டுப்பாட்டு கருவி (ரிமோட்) மூலம் வெடிக்கவைக்கும் நவீன குண்டுவெடிப்புகளின் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் இரானின் 5 அணு விஞ்ஞானிகள்  கொல்லப்பட்டுள்ளனர். மொசாத் எனும் இஸ்ரேலிய பயங்கரவாத உளவு அமைப்புதான் இப்படுகொலைகளைச் செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் இஸ்ரேலியத் தூதரகக் கார் அதே பாணியில் குண்டு வைக்கப்பட்டு வெடித்துள்ளதால், இது இஸ்ரேலின் கைவரிசைதான் என்று கருதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், இது  இரானால் தூண்டிவிடப்பட்டுள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்கிறது இஸ்ரேல். தங்கள் நாட்டிலும் உலகின் பிற நாடுகளில் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து இத்தகைய கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
அடுத்த நாளில், இஸ்ரேலிய தூதரக காரைப் பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் ஒரு இளைஞர் வந்ததாகவும், காரில் ஸ்டிக்கர் குண்டை ஒட்டி அதனை வெடிக்க வைத்ததாகவும் இந்திய உளவுத்துறையினர் கூறுகின்றனர். இரு நாட்களுக்குப் பின்னர், ஒரு சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்டு தெருவில் கிடந்ததாக ஆதாரம் காட்டினர். இந்திய உள்துறைச் செயலாளரோ, இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் எந்த நாட்டையும் தொடர்புபடுத்த எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்கிறார். பிரதமரின் இல்லத்துக்கு 500 மீட்டர் அருகே பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு நடந்திருப்பதே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில், விசாரணை முடிவடையாத நிலையில் கார் வெடிப்பில் காயமடைந்த தூதரகப் பெண் அதிகாரி சிகிச்சைக்குப் பின்னர் அவசரமாகத் தனது நாட்டுக்குச் சென்றுவிட்டார். இவ்வாறு தூதரக அதிகாரியை அவசரமாகத் திரும்பப் பெற்றுள்ள செயலானது, இஸ்ரேல் தனது குற்றத்தை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத், பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பேர்போன கொலைகார அமைப்பாகும். பாலஸ்தீன மக்களும் போராளிகளும் இலக்கு வைத்து அப்படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு நீண்ட வரலாறே உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவுக்கான சௌதி அரேபியாவின் தூதரான அப்தல் அல்ஜூபேர் என்பவரைக்  கொல்ல சதி செய்ததாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது எவ்வித ஆதாரமுமின்றிக் குற்றம் சாட்டின. ஐ.நா.மன்றமும் இக்கொடுஞ்செயலைக் கண்டித்து தீர்மானம் இயற்றியது. ஆனால் இது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத் ஆகியவற்றின் கைவரிசைதான் என்று பின்னர் அம்பலப்பட்டது. அமெரிக்காவின் ஏற்பாட்டில் இஸ்ரேலே டெல்லியில் நடந்துள்ள குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என்தற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதையே இவையனைத்தும் காட்டுகின்றன.
மேற்காசியாவில் இரானின் அரசியல் பொருளாதார ஆற்றலைச் சீர்குலைக்க கடந்த நான்காண்டுகளாகப் பல்வேறு சதிகளை வெளிப்படையாகவே அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் செய்து வருகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டில் அந்நாட்டின் 40க்கும் மேற்பட்ட பொருளாதாரவர்த்தக நிறுவனங்கள் மீதும் முக்கிய வங்கிகள் மீதும் ஐ.நா. மன்றத்தின் மூலம் அமெரிக்கா பொருளாதாரத்  தடைகளை விதித்தது. இரானின் கச்சா எண்ணெய்த் தொழிலில் எந்த நாடும் முதலீடு செய்யக் கூடாது, அணு ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாகச் சந்தேகித்தால் இரானியக் கப்பல்களை நடுக்கடலிலேயே சோதனையிடவும் தனக்கு அதிகாரமுண்டு என்று பல்வேறுவிதமான மேலாதிக்க நடவடிக்கைகளை இரான் மீது அமெரிக்கா ஏவிவிட்டுள்ளது.
அணுகுண்டு தயாரிப்பதா, வேண்டாமா என்று தீர்மானிக்கும் இரானின் சுயாதிபத்திய உரிமையை அமெரிக்கா மறுக்கிறது. அமெரிக்காவுக்கு விசுவாசமாக, சர்வதேச அணுசக்தி முகமையில் இரானுக்கு எதிராக இந்தியா  வாக்களித்தது.  இரான்  பாகிஸ்தான்  இந்தியா இடையே குழாய் வழியாக இயற்கை எரிவாயுவைக் கொண்டுவரும் ஒப்பந்தத்தையும் இந்தியா கிடப்பில் போட்டுவிட்டது.  இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான நிலுவையை ஆசியன் கணக்குத் தீர்வு ஒன்றியம் மூலம் பட்டுவாடா செய்துவந்த இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்காவின் கட்டளைக்கு ஏற்ப அந்த கணக்குத் தீர்வு ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டது.
இரான்இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் இரான் 12 சதவீதப் பங்கு வகிக்கிறது. கடந்த டிசம்பர் இறுதியில் இரானின் மத்திய வங்கியுடன் எந்த நிதி நிறுவனம் உறவு கொண்டாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தடைவிதித்தார். இதனால், இந்தியா தனது எண்ணெய் நிலுவையை இரானுக்குப் பட்டுவாடா செய்ய முடியாமல் சிக்கலாகியுள்ளது.
கடந்த பிப்ரவரியில் இரானும் இந்தியாவும் எண்ணெய்க்கான நிலுவையை எப்படிப் பட்டுவாடா செய்து கொள்வது என்பது பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தின. இந்தியா தனது எண்ணெய்க்கான நிலுவையில் 45 சதவீதத் தொகையை ரூபாயாக யூகோ வங்கியில் செலுத்துவது, அந்த வங்கி இரண்டு இரானிய தனியார் வங்கிக்குத் தொகையைத் திருப்புவது என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டது. எஞ்சிய நிலுவையை விரைவில் எப்படி பட்டுவாடா செய்வது என்பது பற்றி பேசுவதென முடிவாகியது. இத்தகைய சூழலில்தான் டெல்லியில் இஸ்ரேலியத் தூதகரக் கார் வெடித்துள்ளது.
துருக்கி, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன. இரானின் நீண்டகால நட்பு நாடான இந்தியாவில் பயங்கரவாதச் சதியை அரங்கேற்றுவதன் மூலம், இரானை உலக அரங்கிலும் இந்தியாவிலும் தனிமைப்படுத்தலாம் என்பதாலேயே இந்தியாவில் இஸ்ரேலிய கார் வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இரானுடனான உறவை இந்தியா முற்றாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்பவே இக்குண்டுவெடிப்பும் பயங்கரவாதப் பீதியும் கிளப்பப்பட்டுள்ளது. இரானிலிருந்து எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை கைவிட்டது, அணுசக்தி முகமையில் இரானுக்கு எதிராக வாக்களித்தது ஆகியவற்றில் தொடங்கி, இன்று பொருளாதாரத் தடை, குண்டு வெடிப்பு ஆகிய அனைத்திலும் நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.    நனறி; வினவு.காம்

0 கருத்துகள்: