தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.2.12

நாடு முழுவதும் BSNL ஊழியர்கள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை.


ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வைமேக்ஸ் சேவைக்காக ஸ்டார் நெட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக ஆதாரங்களைத் திரட்ட இன்று சென்னை, டெல்லி, கொல்கத்தா, குர்காவ்ன் ஆகிய நகர்களில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.பி எஸ்என்எல் நிறுவனத்தின் வைமேக்ஸ் சேவையை பொது மக்களுக்கு வழங்க சில தனியார் நிறுவனங்களுக்கும்

franchise அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அனுமதியைப் பெற்ற முக்கிய நிறுவனம் ஸ்டார் நெட் கம்யூனிகேசன்ஸ் ஆகும்.

இந்த franchise அனுமதி பெற வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் வருடாந்திர வரவு-செலவு ரூ. 100 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் நெட் நிறுவனத்தின் பண பலம் அதைவிடக் குறைவாகவே இருந்துள்ளது. ஆனாலும், தங்களது வரவு-செலவு கணக்குகளைத் திருத்தி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக பிஸினஸ் நடப்பது போல காட்டி விண்ணப்பித்துள்ளது ஸ்டார் நெட்.

இதை ஏற்றுக் கொண்டு அந்த நிறுவனத்துக்கு நாட்டின் மிக முக்கியமான 6 மண்டலங்களில் வைமேக்ஸ் சேவை வழங்க அனுமதி வழங்கினார் அப்போதைய அமைச்சர் ராசா. இந்த நிறுவனம் ராசாவுக்கு மிக நெருக்கமானது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த விஷயத்தை இத்தனை நாட்களாக ஆறப் போட்டு வந்த சிபிஐ திடீரென வேகம் காட்டியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ இன்று சென்னை, டெல்லி, கொல்கத்தா, குர்காவ்ன் ஆகிய நகர்களில் 9 இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தத்தை செய்ததில் முக்கிய பங்கு வகித்த 4 பிஎஸ்என்எல் அதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ராசா குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்றாலும், அவரது நிர்பந்தத்தால் தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிய வந்தால், அவருக்கு மேலும் சிக்கல்கள் உருவாகலாம் என்று தெரிகிறது.

0 கருத்துகள்: