தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.12

கறிவேப்பிலை-கொசுறு அல்ல..மருந்துக் கொழுந்து!


சமீபத்தில் ஒரு பெரும் மருத்துவமனை ஒன்றில் கூட்டம் ஒன்றிற்காக சென்ற போது அதில் பேசிய மூத்த மருத்துவர் ஒருவர் சொன்னது ரொம்பவே வலித்தது. இன்றைய நிலையில் இருதய கோளாறுகள் ஏராளமாய்ப் பெருகி வருகிறது. பணமிருந்தால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். அல்லது செத்துப்போக வேண்டியதுதான். ஏழைகளால் எட்ட முடியாத அளவிற்கு சிகிச்சை செலவு கூடுகிறது. அதனால் மாரடைப்பை தவிர்க்க
வழி தேட வேண்டும்; 
என்று தொடர்ந்தது அவர்தம் பேச்சு. உண்மை நிலவரம் அதுதான். 40 களிலேயே அதிக பெருகும் மாரடைப்பிற்கு ஸ்டெண்ட் வைத்தோ; CABGஎனும் பைபாஸ் சிகிச்சை செய்ய 1.5 முதல் 4 லட்சம் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம். அதனால் மரணத்தை, வரும் போது பார்க்கலாம் என ஏற்றுக் கொள்ளும் ஏழைகளை இந்த நவீன உலகம் ஏராளமாய் வேகமாய்ப் படைத்து வருகிறது. ஏன் பெருகி வருகிறது இது போன்ற நோய்கள்? உணவு மாற்றம் ஒரு உறுதியான காரணம்.

மணம் அன்றைய அடுப்பங்கரையின் அலங்காரம். இன்று நவீன மாடுலார் கிச்சனில் புகையுடன் விரைந்து வெளியேறும்மணம் கண்டு பலநேரம் மனம் வலிக்கும். அதற்காக விறகடுப்பில் வெந்நீர் சுடுவது சுகாதாரம் என முட்டாள் பழமை பேச வரவில்லை. சுவையும் அழகும் வேண்டும் என்பதற்காக மட்டும் இரசாயனங்களைக் கொட்டிச் சமைப்பதை நிறுத்த வேண்டும்.அன்று,  “இட்லி மிளகாய்ப் பொடி இடிச்சியா பாட்டி?”  “இன்றைக்கு மணத்தக்காளி போட்டு வத்தக்குழம்பா?, என்ற எங்கள் கேள்விகள், வாசம் பார்த்தே நேசமும் வளர்த்தன.  ‘உங்க தாத்தா பேர் வைக்கும் போதே தெரியும்! அவுகளப்போலவே உனக்கு மூக்கு நீளம்-னு எனும் அங்கீகாரத்துடன் பாட்டி சமைத்த உணவுகள் உடல் மட்டும் வளர்க்கவில்லை; உயிர் வளர்த்தன; நலம் நட்டன. மணமூட்டிச் செய்த அந்த மருந்தாகும் விருந்தின் அடையாளங்கள் வேகமாக தொலைந்து வருவதில் பெருகியது புதுப்புது நோய்க் கூட்டம் மட்டுமே!

வேகமாய் விளையும் அரிசி, பருமனாய் பப்பாளி, பளபளப்பாய் இனிஷியல் கத்தரிக்காய், பாலிஷ் போட்ட ஆப்பிள், சாயம் தெளித்த பருப்புகள், சட்டை கழட்டி வெளுப்பாக்கிய தானியங்கள் என பெருகும் உணவுகள் எல்லாம் வசதியாய் குளிரூட்டப்பட்ட கடைகளில் அலங்காரமாய் அடுக்கி வைக்கப்பட்டதில், மருத்துவக் காப்பீடுகளுக்குள்ளும் மருத்துவ நட்சத்திர விடுதிகளுக்குள்ளும் நாம் நடைப்பிணமாக அடைபட்டு வருகிறோம். முழுதாய் தொலைவதற்குள் மறந்து வரும் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தையும் உணவூட்டும் மரபையும் வேகமாக மீட்டெடுப்பது போர்க்கால அவசரமும் அவசியமும் கூட.



கறிவேப்பிலை. ஒருமுறை காய்கறி அங்காடியில் எல்லாக் காயும் வாங்கி பில்லுக்கு பணம் செலுத்தியதும் சிப்பந்தி, “இந்தாங்க சார் என கறிவேப்பிலையை கொஞ்சம் தந்ததும், கூட வந்த குழந்தை, இது ஏன் ஃப்ரீயா தாராங்க..ரொம்ப சீப்பா?”, என கேட்க எனக்கு கொஞ்சம் வலியும் கோபமும் வந்தது. எத்தனை நல்ல பொருள். இதனைத் தேடி அல்லவா வாங்க வேண்டும்? கடையில் கடைசியில் இலவசமாய்த் தருவதைப் போல பலர் உணவில் கடைசியில் ஓரமாக ஒதுக்கி வைப்பதும் எத்தனை அலட்சியம் என தோன்றும். கறிவேப்பிலை எப்போதும் உப்புக்கு சப்பாணி அல்ல. மணமூட்டி மருந்து.

1950-கள் வரை கறிவேப்பிலையை வெறும் மணமூட்டியாக மட்டும் தான் மேற்கத்திய உலகம் நினைத்திருந்தது. அமெரிக்க  நாட்டின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் அப்போது நடைபெற்ற ஒரு பெரும் ஆய்வில கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவை 42% மும் இரத்த கொலஸ்டிராலை 30% குறைக்கிறது என்ற விபரத்தை சொன்னதும் தான் உலகம் கறிவேப்பிலையை உற்றுப்பார்க்க துவங்கியது. ஆனால் நம்மவர்கள், தமிழ் மருத்துவச் சித்தர்கள் கறிவேப்பிலையின் பயனைப்பாடியது 2000 வருடங்களுக்கு முன்னதாகவே. அசீரணம், பசியின்மை, பித்த நோய்கள் பேதி என பல நோய்களுக்கு அதன் பயனை சித்த மருத்துவம் பாடி இருக்கிறது. இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து உடன் சிறிது கல்லுப்பு, சீரகம் சுக்கு ஆகியன சமபங்கு சேர்த்து சுடுசோறில் சாப்பிட பசியின்மை போகும் என்றது சித்த மருத்துவம். சர்க்கரை நோயாளிகளுக்கும் அது நல்லது.

அசீரணம், அடிக்கடி வாயுத் தொல்லை உள்ளவர்களும் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இந்துப்பு சமபங்கு எடுத்து பொடி செய்து அதனை ½ஸ்பூன் அளவு மோரில் சாப்பிட நோய் தீரும். குடற்புண்கள் வராமல் பார்த்துக் கொள்ளும்.
கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின்கள் நிறைந்து உள்ளதால் கண்களுக்கு நல்லது. ஆண்ட்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த இலைகளீல் கறிவேப்பிலைக்கு முதலிடம் உண்டு. அதில் நிறைந்துள்ள கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் தாம் கறிவேப்பிலையை சர்க்கரை நோய், மாரடைப்பு நோய்களில் மருந்தாக பயன்பட வைக்கிறது. உடலில் உள்ள நல்ல கொலஸ்டிராலானHDL- HIGH DENSITY LIPO PROTIEN –ஐ சாதாரணமாக மருந்தால் உயர்த்துவது கடினம். அதற்கான மருந்துகளும் விலை அதிகம். கறிவேப்பிலை அப்பணியைச் செய்வதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்னும் பெருங்குடல் புற்று நோய் முதலான பல புற்று நோய்களில் கறிவேப்பிலை கட்டி வலர்ச்சியைக் குறைப்பதினையும் கட்டி உருவாவதைத் தடுப்பதிலும் பயனளிப்பதைக் கண்டறிந்துள்ளனர். வயோதிகத்தில் வரும் ஞாபக மறதியை குறைப்பதற்கும் கறிவேப்பிலை பயன் தருகிறது என்பதால், அமெரிக்காவில் பிரபலமான வயோதிக நோயான அல்ஸிமர்  நோயில் இதன் பயனை முழிவீச்சில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

முடி கொட்டுவதை தடுக்க, அமீபையாஸிஸ் எனும் வயிற்றுப்போக்கு  நோயில், அடிக்கடி வீட்டை விட்டு வெளியே புறப்படும் போதும் சாப்பிட்டவுடனும் மலம் கழித்து விட்டு போகலாம் என எண்ணம் வரும்இரிடபிள் பவல் சிண்ட்ரோம் எனும் பேதி நோயில் கறிவேப்பிலை பயனளிக்கும.

இலவசமாக கிடைக்கிறதென்பதால் இனி கறிவேப்பிலையை இலையில் ஒரம் கட்ட வேண்டாம்.கடுகும் கறிவேப்பிலையும் காதலித்து மணமாய் வரும் உணவில் இனி அதனை ஒதுக்கிடவும் வேண்டாம். உங்களை அது பல நோயில் இருந்து காப்பாற்றும்!  
தொடர்புடைய பதிவுகள்:

0 கருத்துகள்: