தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.2.12

வங்கி கொள்ளை:சென்னையில் 5 பேர் சுட்டுக்கொலை!


சென்னையிலுள்ள இரு வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் எனக் கருதப்படும் 5 வடமாநிலத்தவர்களைக் காவல்துறையினர் சுற்றி வளைத்து என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர்.சென்னை பெருங்குடி பகுதியிலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் கடந்த மாதம் 23 ஆம் தேதியும் சென்னை கீழ்க்கட்டளையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இம்மாதம் 20 ஆம் தேதியும் இரு கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதில் பல லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது மேலும் படங்கள் உள்ளே
மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர். இந்நிலையில், இக்கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படம் என சென்னை காவல்துறை கமிசனர் திரிபாதி ஒரு படத்தை வெளியிட்டார்.
இப்படத்தைப் பார்த்து, தன்னுடைய வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தவர்கள்மீது சந்தேகம் அடைந்த பெண் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவில் உள்ள அந்த வீடு நேற்று நள்ளிரவு காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

இந்த வீடு ஒரு முன்னாள் ரவுடிக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது. இவர் தற்போது திருந்தி வாழ்கிறார். இவரின் வீட்டில் வாடகைக்கு இருந்த 5 பேரில் ஒருவரின் முகம், சென்னை கமிசனர் வெளியிட்ட புகைப்படத்தை ஒத்திருந்ததைத் தொடர்ந்து, இவரின் மகள்தான் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவு 2.30 மணியளவில் அந்த வீட்டைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், ஐந்து பேரையும் சரணடையுமாறு அறிவித்ததாக தெரிகிறது. ஆனால், வீட்டினுள்ளிலிருந்தவர்கள் காவல்துறையினர்மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில், இரு காவலர்கள் காயமடைந்ததாகவும் காவல்துறை கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீட்டிலிருந்தவர்கள்மீது பதில் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 5 பேரும் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது. வீட்டிலிருந்தவர்களால் சுடப்பட்டு காயமடைந்ததாக கூறப்படும் இரு காவலர்களும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் வீட்டைச் சோதனை செய்ததில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட 5 பேரில், காவல்துறை வெளியிட்ட புகைப்படத்திலுள்ளவர்தான் இரு வங்கி கொள்ளைக்கும் தலைவராக செயல்பட்டவர் என்றும் அவர் சென்னையிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
இவரின் தலைமையில் 5 பேர் அடங்கிய கொள்ளை கும்பல் வங்கிகளைக் கொள்ளையிட்டதாகவும் இவர்கள் அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
நள்ளிரவு வீட்டைச் சுற்றிவளைத்து 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றிசெய்திகள்:இன்நேரம்      படங்கள்:தினகரன்.காம்

0 கருத்துகள்: