தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.2.12

11 முதல்வர்களின் கடுமையான எதிர்ப்பால் தீவிரவாத தடுப்பு மையத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு.


தீவிரவாதத்தை ஒழிக்கவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்ற அமைப்பை வருகிற 1-ந் தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 3-ந் தேதி பிறப்பித்தது.இந்த மையத்திற்கு ஒரு இயக்குனர், 3 இணை இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்

மத்திய அரசு தெரிவித்து இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட உள்ள, மிகுந்த அதிகாரம் கொண்டது இந்த அமைப்பு. நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி, மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே அதிரடி சோதனைகள் நடத்துவதற்கும், கைது செய்வதற்கும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்த தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதன் முதலாக போர்க்கொடி உயர்த்தினார். இப்படி ஒரு அமைப்பு ஏற்படுத்துவது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவது ஆகும் என்று அவர் எதிர்ப்புக் குரல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதன் மூலம், மாநில அரசுகளின் அனுமதியின்றி மத்திய அரசு யாரையும் நேரடியாக கைது செய்ய முடியும். இது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, இந்திய குடியரசின் அடிப்படை கட்டமைப்பை சிதைத்து விடும். ஆகவே, இதை ஏற்பதற்கு இல்லை. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து, மே.வங்காளம், குஜராத் , பீகார், ஒடிசா, பஞ்சாப், இமாசலப்பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம்,   ஜார்கண்ட், மற்றும் திரிபுரா ஆகிய மாநில முதல்-மந்திரிகளும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு தெரிவித்த 11 முதல்-மந்திரிகளில் மம்தா பானர்ஜி மத்திய அரசு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் கட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தடுப்பு மையத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது குறித்து ஆராயும்படி உள்துறை மந்திரி ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம், ஜெயலலிதா உள்ளிட்ட முதல்-மந்திரிகள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில், தீவிரவாதத்தை மத்திய-மாநில அரசுகள் கூட்டாக செயல்பட்டு ஒழிக்க வேண்டியது நமது பொறுப்பு. இந்த பிரச்சினை குறித்து முதல்-மந்திரிகளின் கருத்தை வரவேற்கிறோம்.
முதல் கட்டமாக மாநில போலீஸ் தலைவர்களின் கூட்டத்தை மத்திய உள்துறை செயலாளர் டெல்லியில் கூட்டி இருக்கிறார். இந்த கூட்டத்தில், தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் அதிகார வரம்பு, வரைமுறை, செயல்பாடுகள் பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்  என்று தெரிவித்து இருந்தார்.
ப.சிதம்பரத்தின் இந்த கடிதத்தைத் தொடர்ந்து, வருகிற 1-ந் தேதி தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் தெரிவித்தபடி, முதலில் மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள், போலீஸ் தலைவர்கள், தீவிரவாத ஒழிப்பு படை தலைவர்கள் ஆகியோரின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனேகமாக இந்த கூட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. 5 மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வருகிற 6-ந் தேதி நடக்கிறது. வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற ஹோலிப் பண்டிகை 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஆகவே மாநில தலைமை செயலாளர்கள், போலீஸ் தலைவர்கள், உள்துறை செயலாளர்கள் கூட்டத்தை 10-ந் தேதி நடத்த முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. 

0 கருத்துகள்: