இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சாமி படம் போட்ட யோகாசன தரைவிரிப்புகளை ஜெர்மனி நிறுவனம் வாபஸ் பெற்றது. ஜெர்மனியின் விக்கன்ஸ்பக் நகரை சேர்ந்த நிறுவனம் ‘யோகிஸ்டர்’. யோகாசனம் செய்யும்போது அணியும் பேன்ட், சட்டை, அமர்ந்து யோகா செய்வதற்கான தரைவிரிப்பு, தியானம் செய்வதற்கான டைமர் கடிகாரம், ஆயுர்வேத டீ, தியான சிடிக்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்று வருகிறது. உட்காரும்
தரைவிரிப்பில் ‘காட்டர்’ என்ற புதிய ரகத்தை யோகிஸ்டர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்து கடவுள்களான விநாயகர், சிவன், லட்சுமி உள்ளிட்ட சாமி படங்கள் அதில் வரையப்பட்டிருந்தன. விலை ரூ.1,600. அமெரிக்காவில் இது பரபரப்பாக விற்பனையானது.
இந்நிலையில், உட்கார்ந்து, கால் வைத்து பயிற்சி செய்யும் தரைவிரிப்பில் சாமி படம் போட்டிருப்பதற்கு இந்துக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சாமி படம் போட்ட விரிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, ஆன்லைன் விற்பனையில் இருந்து, சாமி படம் போட்ட விரிப்பை யோகிஸ்டர் நிறுவனம் நீக்கிவிட்டது.
‘‘புத்தகம், பேனா, பென்சில், மட்டுமின்றி சாதாரண பேப்பர் காலில் பட்டால்கூட இந்துக்கள் தொட்டுக் கும்பிடுவார்கள். மக்களின் மன உணர்வை புரிந்துகொண்டு தரைவிரிப்பை வாபஸ் பெற்ற யோகிஸ்டர் நிறுவனத்துக்கு பாராட்டுகள்’’ என்று அமெரிக்காவாழ் இந்துக்கள் அமைப்பின் தலைவர் ராஜன் சேத் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக