தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.1.12

டெல்லி செல்ல பணம் இல்லாமல் தவித்தேன்: வீரதீர செயல் விருது பெற்ற தர்மபுரி சிறுவன் பேட்டி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பரமேஸ்வரன் (வயது 14). 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கால்வாயில் மூழ்கிய 3 சிறுமிகளை துணிச்சலுடன் மீட்டதால் வீரதீர செயல் விருது பெற்றான். டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் பரமேஸ்வரனுக்குபதக்கம், பரிசு, நற்சா ன் றிதழ் போன்றவற்றை

ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிர தமர் மன்மோகன்சிங் ஆகியோர் வழங்கினார்.   

அவனது பெற்றோர் கோவிந்தன்-லட்சுமி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஏழை குடும்பத்தில் பிறந்த பரமேஸ்வரனுக்கு சிறு வயதிலேயே நீச்சல் தெரியும். அங்குள்ள குளத்தில் நீச்சல் பழகி இருந்தான். அவன் பழகிய நீச்சலும் தைரியமும் 3 சிறுமிகளின் உயிரை காப்பாற்றி உள்ளது. 


18.9.2011-ம் ஆண்டு நாகவதி அணை கால்வாயில் தனது துணியை துவைத்து கொண்டிருந்த சிறுவன் பரமேஸ்வரன் அருகில் 5 சிறுமிகள் தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருந்ததை பார்த்தான். 20 அடி ஆழம் 30 அடி அகலம் கொண்ட கால்வாயில் சிறுமிகள் ஆழப்பகுதிக்கு சென்று விட்டனர். 

அவர்கள் சத்தம் கேட்டு ஓடி குளத்தில் குதித்து சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி ஆகிய 3 சிறுமிகளை காப்பாற்றி கரைக்கு கொண்டு சேர்த்தான். உமா, பூஜா இருவரும் நீரில் மூழ்கி உயிர் இழந்தனர். 

உயர்ந்த இந்த விருது பற்றிய அருமை அவனது பெற்றோருக்கு தெரியவில்லை. பணம் வேண்டுமே என தயங்கி அவர்கள் டெல்லி செல்ல அக்கறை காட்டவில்லை. உறவினர் சிவக்குமார்தான் சிறுவனை அழைத்து செல்ல முன் வந்தார். இருவரும் சென்றுவர ரெயில் கட்டணம் இலவசம், தங்குமிடம், சாப்பாட்டு செலவு போன்றவற்றை மத்திய அரசே கவனித்து கொண்டது. 10 நாட்கள் தங்கி டெல்லியை சுற்றி பார்த்து விட்டு ஜனாதிபதி கையில் தேசிய விருதையும் பெற்ற மகிழ்ச்சியில் இன்று காலை பரமேஸ்வரன் சென்னை வந்தான். 

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்த அவன் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். கோட்டு, சூட்டுடன் டிப்-டாப்பாக தான் பெற்ற விருதை காண்பித்தான். பதக்கம், நற்சான்று, ரூ.20 ஆயிரம் வங்கி காசோலை மற்றும் பரிசு பொருட்கள் தனக்கு கொடுத்ததாக அனைத்தையும் காண்பித்தான். 

பின்னர் சிறுவன் பரமேஸ்வரன் கூறியதாவது:-   

இந்த விருதை நான் நினைத்து பார்க்கவும் இல்லை. தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் 2 பேரை காப்பாற்ற முடியவில்லை. மூன்று சிறுமிகளை மட்டும் காப்பாற்றினேன். 

இந்த வயதில் எனக்கு இவ்வளவு பெரிய விருது கிடைத்தது பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்கிறது. குடும்ப கஷ்டம் காரணமாக டெல்லி செல்ல பணம் இல்லாமல் தவித்தேன். இதனால் அப்பாவும் அம்மாவும் என்னுடன் வரவில்லை. இந்த நேரத்தில் உறவினர் சிவக்குமார் என்னை டெல்லி அழைத்துச்செல்ல முன் வந்தார். இந்த விருதால் நான் மேலும் பல வீர தீர செயல்களை துணிவுடன் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.  

உறவினர் சிவக்குமார் கூறுகையில், பரமேஸ்வரனை அழைத்துக்கொண்டு டெல்லி செல்ல என்னிடம் பணம் இல்லை. பலரிடம் கடன் கேட்டேன். பாலக்கோடு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகன் ரூ.10 ஆயிரம் கொடுத்து பரமேஸ்வரனுக்கு தேவையானதை வாங்கி கொடுங்கள் என்று வழியனுப்பினார். அவர் செய்த உதவியால் நாங்கள் டெல்லி சென்று வந்தோம் என்றார்.

0 கருத்துகள்: