தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.11

அண்ணா ஹசாரே: ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன்?

இன்று ஹசாரேயை கைவிட்டு விட்டனர் என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல் ஒய் திஸ் கொலைவெறிக்கு இணையாக தொலைக்காட்சி ஊடகங்களால் பிரபலப்படுத்தப்பட்டசூப் சாங் அண்ணா ஹசாரே.
ஒய் திஸ் கொலைவெறியை மார்க்கெட் செய்தது சோனி நிறுவனம். அண்ணாவுக்கு டைம்ஸ் நௌ தொலைக்காட்சி. ஏற்கெனவே சோனி நிறுவனம் மார்க்கெட் செய்த பிரபல “சூப் சாங்” ஒன்று உண்டு. அது ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம். அதே போல இந்தியாவின் முதலாளித்துவ ஊடகங்களும் அண்ணாவுக்கு முன்னால் பல பெரியண்ணாக்களை மார்க்கெட் செய்திருக்கின்றன.

ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன் ?

கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் சூப் சாங்குகள் வைரல் ஆகப் பரவுவது குறித்து மகிழ்ச்சி கொள்பவர்களுக்கு, அந்தக் காய்ச்சல் கொஞ்சநாளைக்கு அப்புறம் விட்டுவிடும்போது, அதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். சில மாதங்களுக்கு முன் ஹசாரே எழுச்சியால், “பாரதத்தின்” உடல் கொதித்தை காய்ச்சல் என்று புரிந்து கொள்ளாமல், “உள்ளொளியின் உக்கிரம்” என்று புரிந்து கொண்டவர்களும், காய்ச்சலில் பினாத்தியவற்றை கவிதையெனக் கொண்டாடியவர்களும் உண்டு. அவர்களில் முதல்வர் ஜெயமோகன். ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் இன்றைய (23.12.2011) தினமணி நடுப்பக்க கட்டுரையையும், ஹசாரே குறித்த ஜெயமோகனின் முந்தைய எழுத்துகளையும் பார்க்கவும்.

இன்று ஹசாரேயை கார்ப்பரேட் ஊடகங்கள் கைவிட்டு விட்டன என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல்.
சென்ற முறை கார்ப்பரேட் முதலாளித்துவ ஊடகங்கள் ஹசாரே படத்தை நூறு நாள் ஓட்டியதற்கும், அதனை அரசு அனுமதித்ததற்கும் பல காரணங்கள் உண்டு. அவற்றில் தலையாயது காங்கிரசு அரசின் குறிப்பான ஊழல்களை மறைப்பதற்கு அண்ணாவின் பொதுவானஊழல் ஒழிப்பு உதார் பயன்பட்டது என்பதே. இரண்டாவது காரணம், அண்ணா ஹசாரேயின் இயக்கமென்பது லவ் பெயிலியர் பாய்ஸுக்கான ஒரு சூப் சாங்தான் என்பது ஆளும் வர்க்கத்துக்கும் அரசுக்கும் தெளிவாகத் தெரியும். மூன்றாவது காரணம் கார்ப்பரேட் முதலாளிகளுடனான உறவில் மன்மோகன் சிங்கிடம் நிலவும் “ஆண்மைக்குறைவு”.
இத்தகைய “வரலாற்றுக் காரணங்கள்தான்” மைலாப்பூர் மாமியையும், லாஸ் எஞ்செல்ஸ் அம்பியையும், லெட்டர்ஸ் டு எடிட்டர் தாத்தாவையும் ஐ ஆம் அண்ணா என்று பாடவைத்தன. ஹிந்து சம்பிரதாயத்தின் வழிவந்த தீவட்டிகளான ஆர்.எஸ்.எஸ் காரர்கள், கிறித்தவத்துக்கே நெருக்கடி ஏற்படும் அளவுக்கு மெழுகுவர்த்தி கொள்முதல் செய்யவும் வைத்தன.
இப்போது நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது. சரத் பவாருக்கு அறை விழுந்ததும், “சிட்டியிலுள்ள டான்களெல்லாம்” கூடிப் பேசிவிட்டார்கள். “இது நல்லதல்ல. இன்று கன்னத்தில் அறை, நாளை நெற்றிப்பொட்டில் துப்பாக்கி என்று நிலைமை மோசமாகிவிடும்” என்று முதலாளிகள் கவலையுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, “ஒரு அறைதானா” என்று உளறிவிட்டார் ஹசாரே.
சத்திய சோதனையை தலைக்கு வைத்துப் படுக்கும் அகிம்சாவாதிகளான கார்ப்பரேட் முதலாளிகள் இதைக் கேட்டு அதிர்ந்து விட்டார்கள். காந்தியப் பாதையிலிருந்து ஒரு நூல் வழுவினாலும் தங்களால் ஒப்புக்கொள்ள முடியாது என்பதை அண்ணாவுக்குப் புரிய வைத்து விட்டார்கள். மேலும் கார்ப்பரேட் ஊடகங்களை பணியவைப்பதற்கு எந்தெந்த இடத்தில் ஊசியால் குத்தவேண்டும் என்ற அக்குபஞ்சர் முறைகள் தெரிந்த அதிகாரிகளையும் காங்கிரசு அரசு களத்தில் இறக்கியிருப்பதால் ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன.
இதுதான் விசயம். ஆனால் ஜெயமோகனால் இதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
“பவார் தாக்கப்பட்டபோது அண்ணா பேசிய சொற்களை வைத்து அவருடைய ஆளுமையை அழிக்கிறார்கள். ஊடகங்களும் அரசும் மெல்ல அவதூறு மற்றும் ஆளுமை அழிப்புத் தாக்குதல்களைத் தொடுக்கின்றன. அவர் அறிவுஜீவி அல்ல, எளிய மனிதர். அவருடைய பேச்சு திரிக்கப் படுகிறது” என்று தினமணியில் அரைப்பக்கத்துக்கு கண்ணீர் விட்டிருக்கிறார்.
தற்போது ஊடகங்கள் அண்ணாவின் ஆளுமையை ஏன் அழிக்கின்றன என்று ஆராய்ச்சி செய்யும் ஜெயமோகன், நேற்று இதே ஊடகங்கள் அண்ணா காலைக்கடன் முடிக்கும் காட்சி தவிர அனைத்தையும் ரியாலிடி ஷோவாக லைவ் ரிலே செய்தது ஏன் என்ற விசாரத்தில் ஈடுபட்டாரா தெரியவில்லை.  அண்ணாவை வீழ்த்துவதற்கு முதலாளிகளுக்கும் அறிவுஜிவிகளுக்கும் ஒரு நோக்கம் உண்டென்றால், உயர்த்தியதற்கான நோக்கம் என்ன? கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிடியா?
“அவர் மக்கள் நடுவே இருந்து உருவாகி வந்தவர். அவரது மொழி ராஜதந்திரிகளின் மொழி அல்ல” என்று ஜெத்மலானி போல வாதாடுகிறார் ஜெயமோகன். பவாரை அடித்தவுடன், ஒரு அறைதானா என்று கேட்ட அண்ணா, “அமாய்யா அப்படித்தான் கேட்டேன். அதிலென்ன தப்பு?” என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே. “நான் அப்படி சொல்லவில்லை, இப்படி சொன்னேன்” என்று கோக்கு மாக்கு செய்கிறாரே அது அரசியல்வாதி வேலையில்லாமல் வேறு என்ன?
அண்ணா எப்போதும் தனக்குப் பக்கத்தில் ஒரு தேசியக் கொடி, மற்றும் கிரண்பேடி ஆகிய இரண்டு வஸ்துக்களை வைத்திருக்கிறார். கொடி மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டு எதுவும் வரவில்லை. ஆனால் பேடியின் யோக்கிதை சந்தி சிரிக்கிறது. தன் மீது மதிப்பு வைத்து நம்பி அழைத்தவர்களையே, திருட்டு கணக்கு கொடுத்து ஏமாற்றியிருக்கிறார். கேட்டால் “ஊழல் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்கிறார். “திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால், திருப்பிக் கொடுப்பதே தண்டனை” என்று ஜன் லோக் பால் மசோதாவின் எத்தனையாவது ஷரத்து கூறுகிறது? உலகமே காறித்துப்பும் பேடியின் இந்தப் பித்தலாட்டம் இந்த எளிய மக்கள் சேவகருக்கு மட்டும் புரியவில்லையா? ஆ.ராஜாவுக்கு சிறை, கிரண் பேடிக்கு பிராயச்சித்தமா?
தங்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டவுடன், “நாங்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தவறு செய்திருந்தால் எங்களை தூக்கிலிடுங்கள். ஆனால் லோக் பால் மசோதாவைக் காப்பாற்றுங்கள்” என்று உருகினார் கேஜ்ரிவால். கிரண்பேடி எந்த தூக்கில் தொங்குகிறார்? தூக்குதண்டனை, கசையடி முதலான எளிய காந்திய தண்டனை முறைகள் தவிர வேறு எதையும் அறியாத, அண்ணா ஹசாரேயின் முனியாண்டி விலாஸ் மூளைக்குள் இந்தக் கேள்வி எழவே இல்லையா?
“காந்தி காங்கிரசை கலைக்கச்சொன்னார், ராணுவத்தைக் கலைக்கச் சொல்லவில்லை”. எனவே அண்ணா காந்தியவாதிதான், முனியாண்டி விலாசும் உடுப்பி ஓட்டல்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார் ஜெயமோகன். காந்தி பிரிட்டிஷ் ராணுவத்துக்கே ஆள் சேர்த்துக் கொடுத்த மகான். அண்ணாவோ இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக இருந்தவர். எனவே அவர் காந்தியவாதியாகத்தான் இருக்க முடியும் என்பதை நாம் மறுக்கவில்லை.
“சிறந்த ஊழலற்ற நிர்வாகம்” என்று மோடிக்கு அவர் தெரிவித்த பாராட்டு, இந்து மதவெறியையோ குஜராத் படுகொலையையோ பெயர் சொல்லிக் கூட கண்டிக்காமல் வழுக்கிய அவரது ராஜதந்திரம், பிறகு குஜராத் ஊழல் மாநிலம் என்று விமரிசனம் செய்து தனது பழைய கூற்றை ரத்து செய்த சாதுர்யம், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பிரசாந்த் பூஷண் கூறிய கருத்தை எதிர்ப்பதில் அண்ணா காட்டிய உறுதி போன்ற பலவற்றுடன், இரண்டு பேருக்கும் வாய் பொக்கை என்ற உண்மையையும் கணக்கில் கொண்டு பார்த்தால் அண்ணா ஹசாரே ஒரு காந்தியவாதிதான். பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர்தான் காந்திக்கு வாய் பொக்கையானது என்பது சிறியதொரு வேறுபாடு. அவ்வளவே.
ஹசாரே ஒரு காந்தியவாதி மட்டுமல்ல, அவர் ஜெபி யின் அவதாரம் என்கிறார் ஜெமோ. இந்திய அரசியலில் தனியாகத் தலையெடுக்க முடியாத ஜனசங்கம், 1970 களில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் “முழுப்புரட்சி” இயக்கத்துக்குள் நுழைந்து, பாரதிய ஜனதாவாக பரிணாமம் பெற்றது. தற்போது மீண்டும் அதே காங்கிரசு கட்சியின் ஆட்சி. தனியார்மயக் கொள்கைகளாலும், ஊழல்களாலும் நாறிப்போயிருந்த போதிலும், காங்கிரசின் இடத்தைப் பிடிக்கும் வலிமை பாரதிய ஜனதாவுக்கு இல்லை. ராமன் பெயரிலான கோயிலோ, பாலமோ, பை பாஸ் சாலையோ தங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தராது என்பதும் நாக்பூரின் சர்சங்சாலக்குகளுக்கு தெரிந்திருக்கிறது. எனவே ஒளிந்து கொள்வதற்கு இன்னொரு ஜெ.பி இருந்தால் நல்லது என்பது அவர்களது வேட்கை.
படுகொலை மூலம் இந்துத்துவத்தின் சோதனைச் சாலையை மோடி உருவாக்கியிருந்தாலும், அந்த வழி அனைத்திந்திய அதிகாரத்தை பெற்றுத்தராது என்பது மோடிக்கே தெரிந்து விட்டது. மேலும், அத்தகைய இந்து கிராமத்தை அகிம்சை வழியில் ராலேகான் சித்தியில் அண்ணா ஏற்கெனவே உருவாக்கி விட்டார். அதனை ஆர்.எஸ்.எஸ் அன்றே அடையாளம் கண்டுவிட்டது. இதுதான் நாம் உருவாக்கவிருக்கும் இந்து ராஷ்டிரத்தின் மாதிரிக் கிராமம் என்ற முடிவுக்கும் வந்து விட்டது.
காந்திய சிந்தனையும் இராணுவ இதயமும் கொண்ட ஒரு மனிதரை ஆர்.எஸ்.எஸ் காரர் என்று நாம் புரிந்து கொள்வதற்கு, அவர் காக்கி டவுசரும் கருப்புக் குல்லாவும் அணிந்திருக்க வேண்டுமா என்ன?
கதர் ஆடையை மீறித் திமிரிக் கொண்டு வெளித்தெரியும் அவரது உடல்மொழியைப் பார்த்தாலே அவர் ஒரு “பாசிஸ்ட் நாட்டாமை” என்பதைப் புரிந்து கொள்ளலாம். அல்லது அவரது புகழ்பாடும் ஜெயமோகனின் எழுத்தைப் படித்து, அதில் வெளிப்படும் பதற்றத்தையும், ஆத்திரத்தையும், அசட்டுத்தனத்தையும் அடையாளம் கண்டால், அதிலிருந்தும் அண்ணா ஹசாரே யார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போர்டு பவுண்டேசனின் பினாமியான மகசேசே விருது பெற்றவர்கள், உலகவங்கியின் திட்டத்தை வழிமொழிபவர்கள், ஜிண்டால் உள்ளிட்ட கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகளின் பணத்தில் பொதுவாழ்வை சுத்தம் செய்ய வந்தவர்கள் .. .. என்பன போன்ற புறவயமாகத் தெரியும் உண்மைகளிலிருந்து ஹசாரே யார் என்பதை புரிந்து கொள்வது எளிய மக்களுக்கான வழி. அல்லதுபகிரங்கமாக விவாதித்து முடிவுக்கு வரும் அறிவியல் பூர்வமான வழி.
“இலக்கியம்தான் எனது அரசியல்” என்று தேர்ந்து, அதன் வழியில் தேடிக் கண்டுணரும் அழகியல் உண்மையே அறுதி உண்மை என்று நம்பும் ஆன்மீகவாதிகள், தம் மனச்சாட்சியுடன்அந்தரங்கமாகப் பேசலாம். அல்லது தமது மனச்சாட்சியின் பவுதிக வடிவமான ஜெயமோகனுடனும் பேசலாம்.
நன்றி:வினவு.காம்

0 கருத்துகள்: