ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க பிரிட்டன் முடிவு செய்ததைஅடுத்து, தெஹ்ரானில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தூதரகம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈரானிய மாணவர்கள், அங்குள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியதுடன், அங்கு பறக்கவிடப்பட்டிருந்த பிரித்தானிய கொடியையும் அகற்றி எரித்துள்ளனர்.இந்நடவடிக்கை கடுமையான
சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு செயலகம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எமது உயரதிகாரிகளுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் எவ்வித பாதிப்பும் வராது பாதுகாக்க வேண்டிய கடமை ஈரானிய அரசுக்கு உண்டு என பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைக்கு பிரான்ஸும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள், ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை கொண்டுவந்தன.
சர்ச்சைக்குரிய வகையில் ரகசியமாக ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக அந்நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஈரான் அரசுடனோ அல்லது ஈரானிய நபர்களுடனோ எந்தவித கொடுக்கல் வாங்கல் வர்த்தக நடவடிக்கைகளும் வைத்திருக்க கூடாது என மத்திய வங்கி உட்பட தனது அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் பிரித்தானியா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும், ஈரானுக்கு விற்பனை செய்யப்படும் இயந்திர உபகரணங்கள் ஏற்றுமதியை முற்றாக நிறுத்தியுள்ளன.
ஈரானின் எண்ணெய், மற்றும் பெற்றோலிய இராசயன உற்பத்தி கைத்தொழில்களை நிலைகுலைய வைக்கும் முகமாக இப்புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக