தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.11.11

கடிதத்தை வெளியிட்டதால் தனது இணையதள நிர்வாகியை விரட்டிய ஹஸாரே!


இப்போதுள்ள நிர்வாகிகள் குழுவைக் கலைத்துவிட திட்டமிட்டுள்ளதாக ஹஸாரே எழுதிய கடிதத்தை வெளியிட்டதால், ஆத்திரமடைந்து அந்த இணையதள நிர்வாகியை விரட்டிவிட்டார் அன்னா ஹஸாரே. இதனால் கோபமடைந்த அந்த பத்திரிகையாளர், “ஹஸாரே தெரிந்தே பொய் சொல்வதாகவும், கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால், சிசோதியா ஆகியோரின் சுயநலத்துக்காக,
அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுப்பதாகவும்,” சாடியுள்ளார் அந்த பத்திரிகையாளர்.
உண்ணாவிரதம் மூலம் பிரபலமான அன்னா ஹஸாரேவுக்கு, பேஸ்புக், வலைப்பூ, ட்விட்டர் என சமூக இணையதளங்கள் மூலம் பெரிய அளவு பப்ளிசிட்டி தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது மாட்டியவர்தான் ராஜூ பாருலேகர்.
டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் இவர். இவரது வசம்தான் அன்னா ஹஸாரேயின் இணையதளம் ஒப்படைக்கப்பட்டது. அன்னாஹஸாரேஸ்பீக்ஸ் என்ற பெயரில் ஒரு வலைப்பூ மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தை நடத்தி வந்தவர் இவரே.
ஹஸாரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். ஹஸாரே என்ன சொல்கிறாரோ, எழுதித் தருகிறாரோ அதைப் பதிவு செய்வது இவர் வேலை.
ஆனால் சமீபத்தில் இவரை அந்த வேலையிலிருந்து தூக்கிவிட்டார் ஹஸாரே. காரணம் இதுதான்:
அன்னா ஹஸாரே எழுதிய ஒரு கடிதத்தை இந்த ராஜூ பாருலேகர் வெளியிட்டுவிட்டார். அதில் ஹஸாரேவின் இரட்டை நிலைப்பாடு வெளியில் தெரிந்துவிட்டது.
மவுன விரதமிருந்தபோது எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில், “இப்போதுள்ள டீம் அன்னா குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, மறு சீரமைப்பு செய்யப் போகிறேன். ஊழலை ஒழிக்கும் விருப்பத்துடன் கைகோர்க்க உள்ள பலருக்கும் இதில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என விரும்புகிறேன். இப்போதுள்ள குழுவை கலைத்து புதிய செயற்குழுவை உருவாக்க வேண்டும்,” என்று எழுதி, உடனடியாக அதை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டாராம் ஹஸாரே.
ஆனால் மவுன விரதம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஹஸாரே, டீம் அன்னாவைக் கலைக்க வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த குழு சிறப்பாக இயங்குகிறது, என்று கூறியிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாருலேகர், தன் கைவசமிருந்த அன்னா ஹஸாரேயின் கடிதத்தை இணையதளத்தில் வெளியிட்டுவிட்டார்.
ஹஸாரே கைப்பட எழுதி கையெழுத்துப் போட்டுள்ள அந்தக் கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதால், உடனே அந்த பத்திரிகையாளரை நீக்கிய ஹஸாரே, நான் அப்படியொரு கடிதத்தை எழுதவே இல்லை என்று மறுத்தார்.
ஆனால் பாருலேகர், “ஹஸாரே எதற்காக இப்படி பொய் சொல்கிறார். இதோ அந்தக் கடிதம். இந்தக் கையெழுத்து ஹஸாரேவுடையது. இதை எங்கு வேண்டுமானாலும் நான் நிரூபிப்பேன். இது ஒன்றே போதும், இந்த ஊழல் எதிர்ப்பு நாடகத்தின் சூத்திரதாரிகள் யார், அவர்கள் நோக்கமென்ன என்பதைப் புரிந்து கொள்ள.
கிரண் பேடி, கேஜ்ரிவால், சிசோதியா ஆகியோர் தங்கள் சுயநலத்துக்காக அன்னா ஹஸாரேவை பாதாளத்தை நோக்கி இழுத்துச் செல்கிறார்கள். அவரும் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் அல்ல இவர்கள் நோக்கம். ஊழல் எதிர்ப்பின் பெயரால், முழு அரசியல் செய்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக இந்த போராட்டத்தை ஹஸாரே அறிவித்ததால்தான் நான் இதில் இணைந்தேன். இனி இதிலிருப்பது கேலிக்குரியது,” என்றார்.

0 கருத்துகள்: