தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.11

3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அணுகுண்டுகளை சுமந்து செல்லும் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

அணு குண்டுகளை 3 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சுமந்து சென்று தாக்கும் அக்னி-4 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.அக்னி-4 ஏவுகணை
இந்திய பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ. மூலமாக பல்வேறு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சவுரியா, பிரித்வி-2, அக்னி-2 ஆகிய மூன்று ஏவுகணை சோதனைகள் அடுத்தடுத்து வெற்றிகரமாக
நடந்தன.

இதைத் தொடர்ந்து, அக்னி-2 ஏவுகணையின் தரம் உயர்த்தப்பட்ட புதிய ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த ஏவுகணை தயாரிக்கும் திட்டத்தின் இயக்குனராக பெண் விஞ்ஞானி டெசி தாமஸ் செயல்பட்டார். அக்னி-2 ஏவுகணையை விட துல்லியத்திலும் தரத்திலும் உயர்வான இந்த புதிய ஏவுகணைக்கு அக்னி-4 என பெயர் சூட்டப்பட்டது.

சோதனை வெற்றி

ஒரிசா மாநிலம் பலசார் கடற்கரை அருகே உள்ள வீலர் தீவில், அக்னி-4 ஏவுகணை சோதனை நேற்று காலை நடந்தது. காலை 9 மணி அளவில் நடமாடும் லாஞ்சர் மூலமாக ஏவப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையை சேர்ந்த அக்னி-4 ஏவுகணை, மிகச் சரியாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தது. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

ஏவுகணை சோதனையின் போது, விஞ்ஞானி டெசி தாமஸ், ராணுவ அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் வி.கே.சரஸ்வத், டி.ஆர்.டி.ஓ. தலைமை கட்டுப்பாட்டாளர் (ஏவுகணை பிரிவு) அவினாஷ் சந்தர், விமானப்படை யுத்த தந்திர தலைமை கமாண்டர் ஏர் மார்ஷல் கே.ஜே.மேத்யூஸ் உள்ளிட்டோர் கண்காணித்தனர். இந்த புதிய ஏவுகணைக்கு `அக்னி-4' என பெயரிடப்பட்டுள்ளதாக டெல்லியில் ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

ஒரு டன் ஆயுதம்

இதற்கு முன் தயாரிக்கப்பட்ட அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கும், அக்னி-3 ஏவுகணை 3500 கி.மீ. தொலைவுக்கும் பாய்ந்து சென்று தாக்கும். தற்போது, தயாரிக்கப்பட்டுள்ள ஏவுகணையானது 3 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது. 20 மீட்டர் உயரமும் 17 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணையானது 800 கிலோ முதல் ஒரு டன் (ஆயிரம் கிலோ) வரை அணு ஆயுதங்களை ஏற்றிச் சென்று தாக்கும்.

புதிய வகை தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு இருப்பதால் 3 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாங்கக் கூடியது. இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் வகையில் ரேடார், டிஜிடல் கட்டுப்பாடு சிஸ்டம், கம்ப்யூட்டர் உட்பட பல்வேறு வசதிகள் இந்த ஏவுகணையில் உள்ளன.

ஏவுகணை சோதனைக்காக ஒரிசா கடற்கரை பகுதியில் அனைத்து சிக்னல்களும் முடக்கப்பட்டன. வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. மேலும், இலக்கை ஏவுகணை சரியாக தாக்குகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கடலுக்குள் இரண்டு போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

0 கருத்துகள்: