தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.11

லிபியா சுதந்திர நாடாக பிரகடனம்


_56235175_jex_1209444_de27-1
பெங்காசி:42 ஆண்டுகால கத்தாஃபி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து சுதந்திர நாடாக லிபியாவை தேசிய மாற்றத்திற்கான கவுன்சில்(என்.டி.சி) பிரகடனப்படுத்தியுள்ளது. லிபியாவில் கத்தாஃபிக்கு எதிரான எழுச்சி உருவான பெங்காசியில் சுதந்திர பிரகடன நிகழ்ச்சி நடந்தது. ’லிபியாவின் நகரங்கள் அதில் உள்ள கிராமங்கள், மலைகள், வான்வெளிகள்
அனைத்தும் சுதந்திரமானதாக உலகத்திற்கு பிரகடனப்படுத்துகிறோம்’ என இடைக்கால ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கத்தாஃபி கொல்லப்பட்டது குறித்து சந்தேகங்கள் நிலவும் வேளையில் அவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியாகியுள்ளது. கத்தாபியின் தலையில் குண்டு பாய்ந்து மரணம் நிகழ்ந்ததாக போஸ்ட்மார்ட்டத்திற்கு தலைமை வகித்த டாக்டர் உஸ்மான் அல் சிந்தானி தெரிவித்துள்ளார்.
காலில் காயமடைந்த கத்தாஃபி எதிர்ப்பாளர்களின் கையில் பிடிபட்டு கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் அவர் மீது இரண்டு குண்டுகள் தாக்கின.தலையிலும், வயிற்றிலும் குண்டுகள் துளைத்தன. இதில் தலையில் தாக்கியை குண்டினால் அவரது மரணம் நிகழ்ந்ததாக டாக்டர் உஸ்மான் தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட்மார்ட்டம் தொடர்பான முழுமையான அறிக்கை அட்டர்னி ஜெனரலிடம் ஒப்படைக்கப்படும். முதலில் கத்தாஃபியின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படாது என என்.டி.சி அறிவித்தபோதிலும் சர்வதேச அழுத்தத்தை கருத்தில்கொண்டு தனது முடிவை மாற்றியதாக கருதப்படுகிறது.
கத்தாஃபியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என என்.டி.சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அவரது குடும்பத்தினரிடம் ஆலோசித்தபிறகே உடலை எங்கே அடக்கம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கத்தாஃபியின் உடல் துறைமுக நகரமான மிஸ்ருத்தாவில் ஃப்ரீஸரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கத்தாஃபியின் மரணத்தை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை பரவலாக கைதுச்செய்து சிறையிலடைத்து சித்திரவதை படுத்துவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டின் பல்வேறு சிறைகளில் 7 ஆயிரம் பேர் இவ்வாறு அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் நேரடியாக ஆய்வுச்செய்தபிறகு தெரிவித்துள்ளனர். உள்ளூர் கத்தாஃபி எதிர்ப்பு ராணுவத்தினர் கத்தாஃபி ஆதரவாளர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே பி.பி.சிக்கு பேட்டியளித்த என்.டி.சி பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல் கூறுகையில்,’கத்தாஃபியை உயிரோடு கைதுச்செய்திருக்கவேண்டும்.ஏன் இத்தகைய அக்கிரமங்களை லிபியா மக்களுக்கு செய்தீர்கள் என அவரிடம் கேட்கவேண்டும் என்பது விருப்பமாக இருந்தது’ என தெரிவித்தார்.கத்தாஃபியின் மரணத்தைக்குறித்து விசாரணை நடத்தவேண்டும் என ஐ.நா வின் கோரிக்கையை அவர் வரவேற்றார்.

0 கருத்துகள்: