தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.10.11

நோபல் பரிசு தனக்கு கிடைத்தது தெரியமுன்னரே, மருத்துவரை கொன்றது புற்றுநோய்!


2011 ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புக்களில் முதற்கட்டமாக மருத்துவயியலுக்கான நோபல் பரிசு இன்று (திங்கட்கிழமை)அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் புரூஸ் பட்லர், பிரான்ஸின் ஜூல்ஸ் ஹாப்மேன் மற்றும் கனடாவின் ரால்ப் ஸ்டெயின்மேன் ஆகிய மூவரும், மருத்துவயியலுக்கான இந்நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டனர்.

மனித உடலின் நோய் எதிர்ப்பு தன்மை பற்றியும், உடலில் நோய் தாக்கியதும், நோய் எதிர்ப்பு மண்டலம் எவ்வாறு உடனடியாக செயற்பட்டு எதிர்வினையாற்றுகிறது என்பது குறித்தும், இவர்களுடைய முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் புற்றுநோய்க்கான புதிய மருந்து மற்றும் சிகிச்சை முறை உருவாக்கத்திற்கு மாபெரும் பங்களிப்பு செலுத்துவதனால், இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இம்மூவரில், கனடாவின் ரால்ஃப் ஸ்டேயினென் (Ralp Steinman) கடந்த நான்கு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கபப்ட்டிருந்ததால், நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்படுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர், (கடந்த வெள்ளிக்கிழமை) மரணமடைந்து போனார்.

ஆனால் நோபல் பரிசு அறிவிக்கும் தெரிவுக்குழுவினருக்கு அவர் இறந்து போன விடயம் இறுதி நேரம் வரை தெரியாமல் போனது.

1974ம் ஆண்டிலிருந்து நோபல் கமிட்டி அமல்படுத்தியிருந்த ஒரு நடைமுறையின் படி, நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஒரு நபர், அறிவிப்பு வெளியாகிய காலப்பகுதியில் மரணமடைந்தாலோ, அல்லது பரிசு வழங்கப்படும் தினத்திற்கு முன்னதாக மரணமடைந்தாலோ அவருடைய குடும்பத்தாருக்கு அப்பரிசு வழங்கப்படும்.
ஆனால் மரணமடைந்த ஒருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை. நோபல் கமிட்டியின் சட்டவரைமுறைகளில் இது செல்லுபடியாகாது என்பதால், முடிவு வெளியான பின்னரும், இதில் குழப்பம் நீடிக்கிறது.


இன்றைய அறிவிப்பு வெளியாகும் போது சிலவேளை ரால்ஃப் ஸ்டேய்ன்மனுக்கு பரிசு கிடைக்காமல் போகலாம் என சர்வதேச ஊடகங்கள் முன்னரே எதிர்வு கூறியிருந்தன.

ஆனால், கடுமையான புற்றுநோயை எதிர்த்து தனது இறுதி நான்கு வருடங்களை போராட்டமாகவே கழித்த ஸ்டேய்ன்மென், தனது மருத்துவ ஆய்வுகளுக்காக, தனது புற்றுநோயை கூட சாதகமாக பயன்படுத்தி கொண்டது, அவருக்கு இந்த உயரிய கௌரவத்தை பெற்றுக்கொடுத்திருப்பதில் தவறேதும் நிகழ்ந்துவிடவில்லை என்கிறார்கள்.
ரால்ஃப் டேய்ன்மெனின் மகள் அலெக்ஸிஸ் டேய்ன்மென், அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன், தனக்கும் தந்தைக்கும் நடந்த உரையாடலொன்றை, இப்படி கூறுகிறார்.

- 'எதிர்வரும் திங்கட்கிழமை, நோபல் பரிசு அறிவிக்க போகிறார்களாம்'.
- 'எனக்கு தெரியும். நான் அதுவரை நீடித்திருப்பேன்'

-'ஆனால் நீங்கள் இறந்துவிட்டால், உங்களுக்கு தரமாட்டார்களே!'
- 'இல்லை நான் நீடித்திருப்பேன்.'

எனினும் தந்தை துரதிஷ்டவசமாக உயிருடன் இல்லை. அவருடைய ஆராய்ச்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக அவருக்கு நோபல் பரிசு கௌரவத்தை வழங்குகிற போதும், அந்த நற்செய்தி அவரது காதுகளில் கேட்கப்படவே இல்லை' என்கிறார் அலேக்சிஸ்.
மூவருக்கான பரிசுத்தொகை 1.5 மில்லியன் டாலர் பகிர்ந்தளிக்கப்படவிருக்கிறது.

0 கருத்துகள்: