சென்னை, அக். 8- சென்னையை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள் உள்பட 4 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட் வருகிற 12-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்திய விண்வெளி
ஆய்வு மையம் (இஸ்ரோ) நவீன செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்கு பயன்படும் ராக்கெட்டுகளும் நமது நாட்டு தொழில்னட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் இதுவரை பி.எஸ்.எல்.வி. 19 ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது. அதன்மூலமாக ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கை கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.தற்போது பி.எஸ்.எல்.வி. வரிசையில் 20-வது ராக்கெட்டை (பி.எஸ்.எல்.வி. சி-18) இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இதன்மூலம் ஒரு பெரிய செயற்கை கோள்கள் மற்றும் 3 சிறிய செயற்கை கோள்கள் என 4 செயற்கை கோள்கள் வருகிற 12-ந் தேதி காலை 11 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் 9-ந் தேதி தொடங்குகிறது.
இந்த 4 செயற்கை கோள்களில் மிகப்பெரியது மெகா டிராபிக் என்பது ஆகும். இந்தியா-பிரான்சு கூட்டுத்தயாரிப்பான இந்த செயற்கை கோள் உலகளாவிய புவி வெப்பம், பருவநிலை மாற்றத்தையும் ஆராயும். எனவே இது இந்தியாவுக்கு மட்டுமின்றி இந்துமகா சமுத்திர பகுதியில் உள்ள நாடுகளுக்கும், உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள எஸ்.ஆர்.எம். சாட் செயற்கை கோள் 10 கிலோ எடை கொண்டது ஆகும். இது பூமி வெப்பமடைதலையும் (குளோபல் வாமிங்), வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயுக்களால் ஏற்படும் மாசுபாடுகளையும் ஆய்வு செய்யும்.
கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கி உள்ள 'ஜுக்னு' செயற்கைகோளின் எடை 3 கிலோ. இதில் உள்ள அதிநவீன காமிரா பூமியை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பும். இதன் மூலம், பூமியில் வளமான பகுதிகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை ஆராயலாம். ஐரோப்பிய நாடான லக்சம்பரின் தயாரிப்பான வெசல் சாட் செயற்கை கோள் கடலில் செல்லும் கப்பல்களின் இருப்பிடித்தை கண்டறிய பெரிதும் உதவும்.
மேற்கண்ட 4 செயற்கை கோள்களையும் சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட் வருகிற 12-ந்தேதி விண்ணில் பாய இருக்கிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ராக்கெட் ஏவு கட்டுப்பாட்டுக்குழுவின் அனுமதி கிடைத்ததும் 9-ந்தேதி கவுன்ட்டவுன் தொடங்கும். 12-ந்தேதி காலை 11 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம்" என்று தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக