உலகளவில் கார்பந்தயத்தில் முன்னிலையில் உள்ளது "பார்முலா-1'. ஆண்டு முழுவதும், உலகின் 19 முன்னணி நகரங்களில் போட்டி நடக்கிறது.
மொத்தம் 12 அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் பங்கேற்பார்கள். இதன் முடிவில் ஒவ்வொரு வீரரும் பெறும் புள்ளிகள் அடிப்படையில், முதலிடத்தை பெறுபவர் ஒட்டுமொத்த "சாம்பியன்ஷிப்' பட்டம் வெல்லலாம்.
இதுவரை நடந்த 17 சுற்று போட்டிகளில், 10ல் முதலிடம் பெற்ற "ரெட் புல் ரெனால்ட்' அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மொத்தம் 349 புள்ளிகள் பெற்று, சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே நடந்து வந்த இந்த பந்தயம், முதன் முறையாக வரும் 30ம் தேதி, டில்லியில் நடக்கவுள்ளது. இந்த ஆண்டின் 17வது பந்தயத்தை நடத்த, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 875 ஏக்கர் நிலப்பரப்பில், புதிதாக "புத்தா சர்வதேச சர்கியூட்' மைதானம் அமைக்கப் பட்டுள்ளது.
மொத்தம் 5.14 கி.மீ., சுற்றளவு கொண்ட, இந்த போட்டியின் பந்தய தூரம் 308.4 கி.மீ., ஆகும். இம்மைதானத்தில் சராசரியாக 210.03 கி.மீ., வேகத்தில் செல்லும் போது, இந்த ஒரு சுற்றை ஒரு நிமிடம், 27.02 வினாடியில் கடக்கலாம்.
மொத்தம் 60 சுற்றுகள் சுற்ற வேண்டும். வீரர்கள் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும் என்பதால், இது உலகின் இரண்டாவது அதிவேக மைதானம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த போட்டியை ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக