தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.8.11

ஹஸாரே ஊழல்வாதி:காங்கிரஸ் தாக்கு


14-anna-pranab-kapil-ambika300
புதுடெல்லி:ஊழல்வாதியான அன்னா ஹஸாரேவுக்கு ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த தகுதியில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஹஸாரேவின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதமானது என மத்திய அரசும் குற்றம் சாட்டியுள்ளது.
வலுவான லோக்பால் மசோதாவிற்காக சுதந்திர தினத்திற்கு மறுநாள் காலவரையற்ற சத்தியாகிரக
போராட்டத்திற்கு ஹஸாரே தயாராகிவரும் வேளையில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் தாக்குதல் தொடுத்துள்ளன.
உண்ணாவிரத போராட்டத்திற்கு மேடை அனுமதிக்க தலையிடாவிட்டால் கைதாகி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பிரதமருக்கு ஹஸாரே கடிதம் எழுதியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளன.
இதுத்தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் ஹஸாரேவுக்கு அளித்துள்ள பதிலில், “போராட்டம் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் அதற்கு பொறுப்பான அதிகாரிகளைத்தான் அணுகவேண்டும். போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களைக் குறித்து தீர்மானம் எடுப்பதில் நானோ அல்லது எனது அலுவலகமோ தலையிடுவதில்லை. லோக்பால் மசோதா குறித்து புகார் இருந்தால் அதுத்தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழுவை அணுகவேண்டும்.” என கூறிய பிரதமர் அரசியல் சட்டம் அளிக்கும் அமைதியான போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமைகளை மீறப்படுவதாக ஹஸாரே கூறிய குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.
“நாங்கள் அனைவரும் சொல்லிலும், செயலிலும் அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்” என மன்மோகன்சிங் மேலும் தெரிவித்துள்ளார்.
“இந்து சுவராஜ் அறக்கட்டளை உட்பட ஹஸாரேயின் நான்கு அறக்கட்டளைகளில் ஊழல் நடந்திருப்பதாக, சாவந்த் கமிஷன் கூறியுள்ள புகார்களுக்கு முதலில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என, காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மனீஷ் திவாரி நேற்று டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2003ம் ஆண்டில், அப்போதைய மகாராஷ்டிர அரசின் அமைச்சர்கள் நான்கு பேருக்கு எதிராக, சமூக சேவகர் அன்னா ஹஸாரே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, நீதிபதி சாவந்த் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன், ஹஸாரேயால் நடத்தப்படும் இந்து சுவராஜ் அறக்கட்டளை உட்பட நான்கு அறக்கட்டளைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தது. இந்த அறக்கட்டளைகள் எல்லாம், கிராமப்புற மேம்பாடு மற்றும் நீதி போதனை கல்விக்காக உருவாக்கப்பட்டவை. கடந்த 2005 பிப்ரவரி 23ல் சாவந்த் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த 116 பக்க அறிக்கையில், “ஹஸாரே தான் நடத்தும் அறக்கட்டளை ஒன்றிலிருந்து, தன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 2.2 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார்.
இது சட்ட விரோதமானது; ஊழலுக்கு சமமானது. மேலும், ஹஸாரே நடத்தும் அமைப்புகளில் ஒன்று, 20 ஆண்டுகளுக்கு கணக்கு சமர்ப்பிக்கவில்லை.
மற்றொரு அறக்கட்டளையில் பணியாற்றும் ஊழியர்கள், மிரட்டி பணம் பறிப்பது, சொத்துக்களை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” என, தெரிவிக்கப்பட்டது.
மேலும், ராணுவத்தில் ஹஸாரே பணியாற்றிய போது, அறக்கட்டளைகளுக்கு அவர் கொடுத்த பணம் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த ஆண்டு கேட்கப்பட்ட விவரங்களுக்கும், அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஹஸாரே எப்படிப்பட்டவர் என்பது, சாவந்த் கமிஷன் அறிக்கை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இப்படி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, அன்னா ஹஸாரே நாளை முதல் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டம், ஊழலுக்கு எதிராக நடத்தும் போராட்டம் அல்ல.
லோக்பால் மசோதாவுக்காக நடத்தும் போராட்டம் அல்ல. அவரை காப்பாற்ற நடத்தும் போராட்டம். சாவந்த் கமிஷன் தெரிவித்துள்ள மோசமான குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஹஸாரே பதில் அளிக்க வேண்டும். இதைத் தான் நாடு விரும்புகிறது. போராட்டம் என்ற பெயரில், நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்படுத்த ஹஸாரே முற்படுகிறார். இப்படி ஒரு சீர்குலைவு நடவடிக்கையில் ஒருவர் ஈடுபடும் போது, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது எந்த ஒரு அரசியல் கட்சியின் கடமையாகும்.
ஹஸாரே விவகாரத்தில், இதுவரை மத்திய அரசு மிகவும் பொறுமை காத்து வருகிறது. பார்லிமென்டை அவமதிக்கும் வகையில் செயல்படும், ஹஸாரேக்கு எதிராக மற்ற அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு மனீஷ் திவாரி கூறினார்.
லோக்பால் விவகாரத்தில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசியல் சட்டத்திற்கும், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் சவால் விடுக்கிறார் என மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் தெரிவித்தார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அன்னா ஹஸாரே இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுக்களை எழுப்புவதாக மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார். அன்னா ஹஸாரேவின் குற்றச்சாட்டுக்கள் சட்டத்தைக் குறித்த அவரது அறியாமையை காட்டுகிறது என மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: