தெலங்கானா சிக்கலால் எம்.பி.க்களின் பலத்தை இழந்துவிடுவோமா என்ற அச்சத்தில் உழன்றுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, 18 எம்.பி.க்களை வைத்துள்ள திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2ஜி வழக்கில் திமுகவை அடுத்தடுத்து நெருக்கடியில் தள்ளிய காங்கிரஸ் கட்சியை வகையாக பழி தீர்க்க, சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.
ஆ.ராசா, கனிமொழியை தொடர்ந்து
தற்போது தயாநிதி மாறனையும் 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிகையில் சிபிஐ சேர்த்துள்ள நிலையில், காங்கிரஸ் மீது கருணாநிதி வெகுவாகவே வெறுப்பில் உள்ளார்.தனிப்பட்ட முறையில் தயாநிதி மாறன் பதவி விலகுவது குறித்து கருணாநிதிக்கு வருத்தம் இல்லை என்றாலும், மீண்டும் மீண்டும் 2ஜி வழக்கில் திமுக புள்ளிகளை இழுத்துபோடுவது கட்சியின் மதிப்பை பாதித்துவிடுமே என்ற ஆதங்கம் அவருக்கு ஏகமாய் உள்ளது.
இந்நிலையில்தான் கோவையில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் திமுக பொதுக் குழு மற்றும் செயற் குழு கூட்டத்தை கூட்டியுள்ளார் கருணாநிதி. தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் கூடும் இந்த கூட்டத்தில், முந்தைய கால கூட்டத்தைப் போன்றல்லாமல் இந்த முறை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை திமுக எடுக்கக் கூடும் என்ற பேச்சு கடந்த இரு வார காலமாகவே பேசப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் காங்கிரஸ் மேலிடத்திற்கு எட்டியபோதிலும், மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஆகியவை கேட்காமலேயே வெளியிலிருந்து அளித்துக் கொண்டிருக்கும் ஆதரவால், திமுகவின் இந்த விலகல் மிரட்டலை கடந்த காலத்தைப் போன்றே இம்முறையும் அலட்சியப்படுத்தியது காங்கிரஸ்.
ஆனால் திடீர் சிக்கலாக தெலங்கானா தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதில் தெலங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களின் 11 பேரது ராஜினாமாவும் இடம்பெற்றிருப்பதுதான் காங்கிரஸ் கட்சியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக