மும்பை/புதுடெல்லி:மும்பையில் 3 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நகரத்தில் நெரிசல் மிகுந்த தாதர், ஓபரா ஹவுஸ், தெற்கு மும்பையில் ஜவேரி பஸார் ஆகிய இடங்களில் நேற்று மாலை 6.45 க்கும் 7.05 மணிக்கும் இடையில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் கடுமையாக இருப்பதால் மரண எண்ணிக்கை உயரும் என போலீஸ் அறிவித்துள்ளது.
தெற்கு மும்பையில் தங்க-வைர வர்த்தக மையமான ஜவேரி பஸாரில் முதல் குண்டு வெடித்தது. இரண்டாவது குண்டுவெடிப்பு மத்திய மும்பையில் தாதரில் கபூதர் கானாவில் டாக்ஸி கார் வெடித்து சிதறியதாக போலீஸ் கூறுகிறது. மூன்றாவது குண்டுவெடிப்பு நடந்த சர்ணியில் ஓபரா ஹவுஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் வாகனங்களும், கடைகளும் தகர்ந்தன. மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள் உதவி கேட்டு குரல் எழுப்பிய காட்சி உள்ளத்தை பிசைவதாக இருந்தது. கடந்த 2008 நவம்பர் மாதம் நடந்த மும்பை தாக்குதலின் மனப்பதிவை ஏற்படுத்தும் விதத்தில் சுருங்கிய கால இடைவேளைகளில் மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தியது என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மும்பையில் நடந்தது தீவிரவாத தாக்குதல் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்த ப.சிதம்பரம் இச்சம்பவத்தை என்.ஐ.ஏ விசாரணை நடத்தும் என தெரிவித்தார். என்.எஸ்.ஜி கமாண்டோக்களும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவின் அதிகாரிகள் மும்பைக்கு வர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. டெல்லியில் உள்துறை செயலாளர் ஆர்.கே.பாட்டீலின் தலைமையில் உயர்குழு கூடி நிலைமைகள் குறித்து விவாதித்தது.
மும்பையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் தீவிர பாதுகாப்புக்குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், பாக்.பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி ஆகியோர் குண்டுவெடிப்பை கண்டித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் பிரதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவர் சென்றார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும், எவ்வித அவசர சூழலையும் எதிர்கொள்ளும் விதம் பாதுகாப்பு படையினர் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் என எஸ்.எம்.எஸ் செய்தி மூலம் போலீஸ் உத்தரவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மும்பைக்கு செல்வார் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக