தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.7.11

போலீசில் ஆஜராக கலாநிதி மாறனுக்கு அவகாசம்

சேலத்தை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் செல்வராஜ்.இவர் சென்னை கே.கே.நகர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சன்பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, என்னிடம், தீராத விளையாட்டு பிள்ளை படத்துக்கு சேலம் வினியோக உரிமை தருவதாக கூறி 83 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வாங்கினார். அதன் பிறகு சேலத்தில் அந்த படத்தை வெளியிடுவதற்கான உரிமை தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே சக்சேனா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, சக்சேனா கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது “சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நான் என் விருப்பப்படி செயல்படவில்லை. நிர்வாகம் சொன்னபடிதான் நடந்து கொண்டேன்” என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, கே.கே. நகர் போலீசார் இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனிடம் விசாரிக்க முடிவு செய்தனர். எனவே விசாரணைக்கு இன்று போலீஸ் நிலையம் வரும்படி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
இன்று காலை 10 மணிக்கு கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கலாநிதிமாறன் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும். எனவே கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் குருசாமி, இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் விசாரணைக்கு தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் வக்கீல் பாட்ஷா தலைமையில் 7 வக்கீல்கள் கலாநிதிமாறன் சார்பாக கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார்கள். போலீஸ் அதிகாரிகளை சந்தித்த வக்கீல்கள், கலாநிதி மாறன் ஏற்கனவே ஒப்புக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. 26 ந்தேதி வரை வெளியூரில் இருப்பதால் அவர் விசாரணைக்கு வர இயலவில்லை என்று விளக்கம் அளித்தனர்.
வக்கீல்களின் விளக்கத்தை போலீஸ் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வக்கீல்களின் விளக்கத்தை போலீசார் எற்றுக் கொண்டதால் கலாநிதிமாறன் 27ந் தேதி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்: