இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் பட்டினிப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் அமைப்புகள் செய்து உள்ளது.
இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-2009ம் ஆண்டில் இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்ற நடவடிக்கைகளை ராஜபக்சே அரசு செய்துள்ளதை ஐ.நா. நிபுணர் குழு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. ராஜபக்சே உள்ளிட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றம் காரணமாக பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள மனித நேய ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஐ.நா.வை இந்தியா வற்புத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
1-7-2011 அன்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் நடத்திய ஆர்வலர்கள் கூட்டத்திலும் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு, ஐ.நா.வை வற்புறுத்த வேண்டும் என்றும், தேவைப்படுமானால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தவும் பெங்களூர் தமிழ்ச்சங்கம் தயாராக உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்கவும், கச்சத்தீவை மீண்டும் இந்தியா உடன் இணைக்கவும், இலங்கை மீது இந்தியா பொருளாதார கட்டுப்பாட்டினை கொண்டு வருவதுடன், இலங்கையுடனான உறவுகளை இந்தியா முறித்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகிற 28 ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டெல்லியில் பட்டினிப் போராட்டம் உலகத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகிறது.
இந்த பட்டினி போராட்டத்தில் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழ் அமைப்புகளை சார்ந்தோர் கலந்து கொள்கிறார்கள். அரசியல் சார்பற்ற முறையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து எண்ணற்ற தமிழ் அமைப்புகள் கலந்து கொள்கின்றன. பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் சங்க தலைவர் மு.மீனாட்சி சுந்தரம், துணைத் தலைவர் இராசு.மாறன், துணைச் செயலாளர் மு.சம்பத், முன்னாள் செயலாளர் தாமோதரம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக