தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.6.11

சாய்பாபாவின் வாரிசு மற்றும் உயில் விவரங்களை வெளியிடுவேன்: அமெரிக்க பக்தர்

புட்டபர்த்தி, ஜூன். 23-  சாய்பாபா தனக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பது? தான் உயிலில் எழுதப் போவது என்ன? போன்ற விவரங்களை கூறி இருந்தார். அதை நான் 6 வாரத்தில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்பணம் கொடி கொண்டா போலிசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கியது. இதையடுத்து கார் ஓட்டுனர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சென்னை தொழில் அதிபரின் கார்
ஓட்டுனர் சந்திரசேகர், பெங்களூரைச் சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சொகுசு பேருந்தில் கடத்தப்பட்ட பல கோடி பணத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புட்டபர்த்தி போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர் ரத்னாகர், சென்னை தொழில் அதிபர் ஆகியோருக்கு போலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில் சாய்பாபாவுக்கு மிகவும் நெருக்கமான அமெரிக்க பக்தர் ஐசக் டிரிகேட் புட்டபர்த்தியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அமெரிக்காவில் பீர் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. நிம்மதி கிடைக்கவில்லை. போதைக்கு அடிமையாகி மிகவும் கஷ்டப்பட்டேன். எனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபா பற்றி கேள்விப்பட்டு இந்தியா வந்தேன். அவரது ஆசியால் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு மன நிம்மதி கிடைத்தது. இதனால் அடிக்கடி இந்தியா வந்து சாய்பாபாவை சந்தித்தேன். இதனால் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக புட்டபர்த்தி ஆசிரமத்தில் தங்கி உள்ளேன். சாய்பாபா என்னிடம் மனம் திறந்து பேசுவார். அப்போது அவர் தனக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பது? தான் உயிலில் எழுதப் போவது என்ன? போன்ற விவரங்களை கூறி இருந்தார். அதை நான் 6 வாரத்தில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது, சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள், கோடிக் கணக்கான பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆந்திர அரசு இனியும் மவுனமாக இருப்பது நல்லதல்ல. சாய்பாபா ஆசிரம சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும். ஆசிரமத்தில் நடந்த கொள்ளை பற்றி விரிவான விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சாய்பாபா அறக்கட்டளை ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சாய்பாபாவின் உறவினர் கேட்டுக் கொண்டு உள்ளார். இதுபற்றி சத்ய சாய்பாபாவின் சகோதரி வெங்கம்மாவின் மகன் சங்கர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சத்ய சாய் மத்திய அறக்கட்டளையில் நடந்துள்ள ஊழல் விவகாரங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழலில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். கொடிகொண்டா சோதனைச்சாவடியின் அருகே நடந்த போலீஸ் சோதனையின் போது காரில் சிக்கிய பணம் அறக்கட்டளையின் பணம்தான் என உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அறக்கட்டளையின் மீது பக்தர்களைப் போலவே சாய்பாபாவின் உறவினர்களான எங்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பற்றி எங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் தகவல் தெரிவித்தனர். 10 நாட்கள் வரை அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. சாய்பாபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சபயா, சாய்பாபாவின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறிய நிலையில், பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். பாபாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எங்கள் குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் பெருத்த சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.
பாபா வசித்த யஜூர் வேத மந்திரத்தில் அவர் எழுதி வைத்த உயில் கட்டாயம் கிடைத்து இருக்கும். இவ்வளவு பெரிய அறக்கட்டளையை நிர்வகித்து வந்த பாபா, தனக்கு பிறகு அதை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றி உயில் எழுதி வைத்து இருப்பார். ஆனால் உயில் எதுவும் இல்லை என்று கூறுவதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. அது குறித்தும் விசாரிக்க வேண்டும். சீடர் சத்யஜித் கடந்த 18 ஆண்டுகளாக சாய்பாபாவுக்கு சிறந்த சேவை செய்தார். இதுபற்றி பாபாவே பலமுறை பாராட்டி பேசி உள்ளார். எனவே அறக்கட்டளையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு சங்கர் ராஜூ கூறினார்.
சாய்பாபாவின் மற்றொரு சகோதரி பார்வதியம்மாவின் பேரன் சிரவண் கூறியதாவது:-
சத்ய சாய் அறக்கட்டளையில் ஊழல் நடந்தால் அறக்கட்டளைக்கு தான் கெட்ட பெயரே தவிர பாபாவுக்கு அல்ல. பக்தர்கள் பாபாவை பார்த்துதான் நன்கொடை கொடுத்தார்களே தவிர, அறக்கட்டளை உறுப்பினர்களை பார்த்து அல்ல. பாபா ஏதோ அறக்கட்டளைக்கு மட்டும் தான் சொந்தம் என்பது போல் நடந்துகொண்டார்கள். பாபா உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. அவர் வசிப்பிடத்தை திறந்து பார்த்த போதும் உள்ளே செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாபாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சேவை பற்றிய அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த பிரச்னையில் அரசாங்கம் தலையிட்டு எல்லாவற்றையும் விசாரித்து பக்தர்களின் சந்தேகங்களை போக்க வேண்டும். இவ்வாறு சிரவண் கூறினார்.
இந்நிலையில் சத்ய சாய்பாபா அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றிய ஆந்திர அரசின் ஆலோசனை கூட்டம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது. முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அறநிலையத்துறை மந்திரி லட்சுமைய்யா, மந்திரி ரகுவீரா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும், மந்திரி லட்சுமைய்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
சத்ய சாய்பாபா 35 ஆண்டுகள் ஆன்மிக பணிகள் மட்டும் இன்றி, மக்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற சமூக பணிகளிலும் ஈடுபட்டு இருக்கிறார். அரசு செய்யாத பல குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். அவரது மரணத்துக்கு பின், அவரது அறக்கட்டளை பற்றி வெளியாகி வரும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை. எனவே இது பற்றி ஆலோசித்தோம். தற்போது அறக்கட்டளைக்கு இருக்கும் சொத்து எவ்வளவு? பணம் எவ்வளவு இருக்கிறது? எதிர்கால திட்டம் என்ன? என்று கேட்டு அறகட்டளைக்கு கடிதம் அனுப்புகிறோம். இதற்கு பதில் வந்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி யோசிப்போம். இவ்வாறு மந்திரி லட்சுமைய்யா கூறினார்.

0 கருத்துகள்: