தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.6.11

பா.ம.க.,வில் நீக்கம் தொடர்வது யாருக்காக? புதிய பரபரப்பு


பா.ம.க., தோன்றிய காலத்தில், அன்புமணியின் எதிர்காலம் கருதி, தலித் எழில்மலை உள்ளிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனால், இன்று தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் பா.ம.க.,வில், தலைவர் மணிக்காக, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலர் நீக்கப்பட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு தேர்தல் வெற்றிக்காக, பா.ம.க., அணி மாறும் வித்தையை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது. 2009, லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல்
மண்ணைக் கவ்வியது. 2011, சட்டசபை தேர்தலிலும் தோல்வியால் துவண்டு போகும் நிலையில் உள்ளது.பா.ம.க., தனித்து போட்டியிட்ட, 1996, சட்டசபை தேர்தலில் கூட, அக்கட்சி சார்பில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது. ஆனால், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சட்டசபை தேர்தலில், அக்கட்சியால் மூன்று தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தொடர் தோல்விகளுக்கு முழு காரணம், பா.ம.க., தலைமையும், தலைவர் மணியும் தான் என, பா.ம.க.,வினர் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, காமராஜ் ஆகியோர் சமீபத்தில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், பல எம்.எல்.ஏ.,க்கள், கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக, கல்தா பட்டியல் மேலும் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தில் மணியின் தலைவர் பதவிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில், தலைமை உறுதியாக உள்ளது. மணிக்கு நிகராக வளர்ந்து வருபவர்கள், தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான், பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இவரை போல், தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., சிவகாமி வின்சென்ட், அந்தியூர் கிருஷ்ணன், வந்தவாசி முருகவேல்ராஜன், தாரமங்கலம் கோவிந்தன், இடைப்பாடி கணேசன் ஆகியோர் வரிசையில், தற்போது இடைப்பாடி காவேரி, மேச்சேரி காமராஜ் இடம் பிடித்துள்ளனர்.
வன்னிய இன உணர்வுள்ள இவர்களில் பலர், வேறு கட்சிகளுக்கு சென்று விட்ட நிலையில், ஒரு சிலர் மட்டும், வன்னியர் சங்கங்களில் தொடர்கின்றனர். இவர்கள், ராமதாசை, வன்னியருக்கு எதிரானவர் என, தொடர்ந்து விமர்சனம் செய்கின்றனர்.கடந்த, 1986- 89ம் ஆண்டுகளில், “தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிப்பது நாங்கள் தான்’ எனக் கூறிய பா.ம.க., தலைமைக்கு, தற்போது பேரிடியாக தலைவர்களின் நீக்கம் அமைந்து விட்டது. இந்த நீக்கம், பா.ம.க.,வில் பெரிய அளவில் அதிர்ச்சி அலையாக உருவெடுத்து உள்ளது.ஒரு சிலரின் சுயநலத்துக்காக, பா.ம.க., தலைமை கல்தா ஆயுதத்தை கையில் எடுப்பதால், வட மாவட்டங்களில் பா.ம.க., வலு விழந்து விட்டதாக பா.ம.க., தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

0 கருத்துகள்: