தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.6.11

ரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பிரமுகர்கள் விரைவில் கைது?


தமிழக மேற்கு மண்டலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலங்கள், சொத்துகள் விவசாயிகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளது, போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இக்குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், அவர்களின் பினாமி பெயரில் செயல்படும் கட்டுமான நிறுவனங்களின் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின்
உரிமையாளர்களை கைது செய்வதற்கான ஆதார ஆவணங்களை திரட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுவதும், “ரியல் எஸ்டேட் தொழில்’ உச்சகட்டத்தை எட்டியிருந்தது. அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களும், அதிகாரத்தில் இருந்தவர்களும் பினாமி பெயரில் வீட்டுமனை விற்பனை, அபார்ட்மென்ட் கட்டுமான நிறுவனங்களை துவக்கி பல ஆயிரம் கோடி ரூபாய்வரை முதலீடு செய்திருந்தனர். தங்களது தொழிலை விரிவுபடுத்த விவசாயிகள் மற்றும் தனி நபர்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலங்களை அபகரித்துக்கொண்டதாக பலரும் போலீசில் புகார் அளித்தனர். குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் என்பதால், புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நிலம் அபகரிப்பு விவகாரம் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த நிலம் அபகரிப்பு குற்றங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்ட முதல்வர், அதுகுறித்த புகார் விபரங்களை மாவட்டம் வாரியாக திரட்ட போலீஸ் உயரதிகாரிகளை பணித்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் தகவல்கள் திரட்டும் பணி மும்முரமாக நடக்கிறது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டலத்தில் திரட்டப்பட்ட ரகசிய தகவல்கள் போலீஸ் அதிகாரிகளையே திடுக்கிடச் செய்துள்ளன.
கிடப்பில் 300 புகார்கள்: கடந்த 2006 – 11 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் மட்டும் 300 பேர், தங்களது சொத்துக்களை அரசியல்வாதிகள், கட்டப்பஞ்சாயத்து நபர்கள், ரவுடிகள், குண்டர்கள் மிரட்டி அபகரித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தனர். புகார்கள் அனைத்தும் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், சப்-டிவிஷன் டி.எஸ்.பி.,கள், எஸ்.பி.,க்களிடம் அளிக்கப்பட்டவை. பாதிக்கப்பட்டவர்களிடம் மனுக்களை பெற்ற போலீஸ் அதிகாரிகள், அரசியல் மற்றும் அதிகார தலையீடு காரணமாக மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் நடவடிக்கையை கிடப்பில் போட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் அலுவலகங்களின் படியேறி அலைந்தது தான்மிச்சம். ஆட்சி மாற்றத்துக்குபின் தற்போது இப்புகார்கள் தூசு தட்டப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் உத்தரவை தொடர்ந்து, எட்டு மாவட்டங்களில் கிடப்பில் உள்ள நிலம் அபகரிப்பு தொடர்பான புகார்கள், அந்தந்த மாவட்ட குற்ற ஆவண காப்பகம் (கிரைம் ரெக்கார்டு பீரோ) மூலம் திரட்டப்பட்டுள்ளன. ஆரம்ப கட்ட விசாரணையில் மேற்கண்ட 300 புகார்களில், 50 புகார்கள் குறித்த சம்பவங்கள் உண்மையென்றும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலம், சொத்துகள் அரசியல்வாதிகள், குண்டர்கள், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து கும்பல்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இக்குற்றங்களில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு ஐ.ஜி., வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, சேலத்தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், அரசியல் பிரமுகர்கள், பினாமிகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரால் விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
கட்டப்பஞ்சாயத்தில் 43 பிரமுகர்கள்: மேற்கு மண்டலத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம், சொத்துகள் அபகரிக்கப்பட்டது தொடர்பாக கடந்த ஆட்சியில் எண்ணற்ற புகார்கள் எழுந்தன. எனினும் நடவடிக்கை இல்லை. கட்டப்பஞ்சாயத்து நடத்திய நபர்களின் பட்டியலை, மாவட்டம் வாரியாக போலீசார் திரட்டியுள்ளனர். தி.மு.க.,- பா.ம.க., – விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள், மற்றும் மதம், ஜாதி ரீதியான அமைப்புகளைச் சேர்ந்த 43 நபர்கள், கட்டப்பஞ்சாயத்துக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலரும் மாநகர, மாவட்ட, மாநில பொறுப்புகளை வகிப்பவர்கள். இந்நபர்களின் சமூக, அரசியல், பொருளாதார பின்னணி, சொத்து விபரம், ஆள் பலம் தொடர்பான விபரங்களை திரட்டியுள்ள போலீசார், இந்நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக போலீசில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், கட்டப்பஞ்சாயத்து பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான ஆதாரங்களை திரட்டியதும் கைது செய்து சிறையில் தள்ள முடிவு செய்துள்ளனர்.
சமூக விரோத செயலில் 203 பேர்: பணம், நகை, சொத்துக்களை அபகரித்தல், ஆள் கடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ரவுடித்தனம் செய்தல், ரேஷன் அரிசி கடத்துதல், மணல் கடத்துதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் பட்டியலில் 203 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 98 பேர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்நபர்களின் பெயர் பட்டியலை “ஏ -பிளஸ்’, “ஏ’, “பி’, “சி’ “டி’ என வகை பிரித்துள்ள போலீசார், முதல் வகை பட்டியலில் உள்ளோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ள திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக, “ஏ’ பிரிவு பட்டியலில் இருப்போரை குற்றதன்மைக்கு ஏற்ப கைது செய்து சிறையில் அடைக்கவும், “சி’ மற்றும் “டி’ பிரிவு பட்டியலில் இருப்போரை பிடித்து கடுமையான எச்சரிக்கை விடுக்கவும் தயாராகி வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் வாரியாக தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியல் குறித்த விபரங்களை அறிந்த ரவுடிகள், குண்டர்கள், கட்டப்பஞ்சாயத்து நபர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டனர்.
கட்சி பேதமின்றி நடவடிக்கை: ஐ.ஜி., : மேற்கு மண்டல ஐ.ஜி.,வன்னிய பெருமாள் கூறியதாவது:நிலம் அபகரிப்பு, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை பற்றிய தகவல்கள் மாவட்டம் வாரியாக திரட்டப்பட்டுள்ளன. கட்சி, ஜாதி, மதம் வித்தியாசம் பாராமல் குற்றத்தன்மையின் அடிப்படையில் மிக நேர்மையான முறையில் உண்மையான தகவல்களே சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட குற்றங்கள் தொடர்பாக போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருத்திருப்பதால், அவர்களிடம் புதிதாக புகார் மனுக்களை பெற்று சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில், தங்களது நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக 300க்கும் அதிகமானோர் புகார் அளித்திருந்தனர். மனுதாரரின் புகாரில் உண்மையிருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மணல் சுரண்டல் மற்றும் கடத்தல் குற்றங்கள், மேற்கு மண்டலத்தில் பெரிய அளவில் இல்லை. சில இடங்களில் டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலமாக கடத்தப்படுகின்றன; அவற்றை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரவுடி லிஸ்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி குற்றங்களை தடுக்க “விஸிபிள் போலீசிங்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலையில் போலீசார் சாலையில் நின்று, மக்களின் பார்வைக்கு தெரியும்படி வெளிப்படையாக பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, ஐ.ஜி.,வன்னியபெருமாள் தெரிவித்தார்.

0 கருத்துகள்: