தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.6.11

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இருந்து சிபிஐக்கு விலக்கு ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி


சென்னை, ஜூன் 28: தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐ அமைப்புக்கு விலக்கு அளித்திருப்பது ஏன் என்று விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம், அரசு அலுவலகங்களில் நடைபெறும் பல்வேறு மோசடிகள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிரான வலிமையான ஆயுதமாக பொதுமக்களுக்கு இந்த சட்டம் பயன்பட்டுவருகிறது.
இந்நிலையில், தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐ அமைப்புக்கு விலக்களிப்பதாக, கடந்த 9ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து  விஜயலெட்சுமி என்ற சமூக ஆர்வலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐக்கு விலக்களித்து விட்டால், பல முக்கிய வழக்குகள் குறித்த உண்மையான விவரம் மக்களுக்கு தெரியாமல் போய்விடும் என்று கூறியிருந்தார். அதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்களிக்கும் மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரி இருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐக்கு விலக்களித்திருப்பது குறித்து, மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

0 கருத்துகள்: