தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.5.11

சென்னை மாணவி சந்தியா மாநிலத்தில் முதலிடம்


சென்னை, பிற மொழியை மொழிப்பாடமாக எடுத்து படித்ததில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவி சந்தியா 1191 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்கிறார்.
பிளஸ்-2 தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் அல்லாத பிற மொழியை ஒரு மொழிப்பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளில், மாநிலத்திலேயே முதல் இடத்தை சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவி கே.சந்தியா பிடித்தார்.

குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீமதி ராம்குமார் தேவி போம்ரா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் படித்த இவர், மொத்தம் 1191 மதிப்பெண்கள் பெற்றார். இதில், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் அவருக்கு கிடைத்தது.
மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி சந்தியாவை பள்ளி தாளாளர் ஆர்.ரவீந்திரன், முதல்வர் பிரேமா மகாதேவன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினார்கள். சந்தியாவின் பெற்றோர் கண்ணன்-சிவகாமி ஆகியோர் ஆவர். இருவரும் பி.எஸ்.என்.எல்.-ல் அதிகாரிகளாக உள்ளனர். சகோதரி சிவசங்கரி, ஏற்கனவே என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.
முதலிடம் பெற்றது குறித்து மாணவி கே.சந்தியா கூறியதாவது:-
என்னுடைய பெற்றோர் படிக்க சொல்லி எப்போதும் வற்புறுத்தியதில்லை. எனது கடமையை உணர்ந்து, அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து வந்தேன். தினமும் இரவு 10 மணி வரையும், அதிகாலை 4 மணிக்கும் எழுந்து படிப்பேன். சமஸ்கிருதம் எளிதாக இருந்ததால், அதை மொழிப்பாடமாக எடுத்து படித்தேன்.
ஐ.ஏ.எஸ். லட்சியம்
இதனால், இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி படிக்க முடிந்தது. கடவுள் அருளாளும், ஆசிரியர்கள் ஊக்கத்தாலும் இவ்வளவு மார்க் என்னால் எடுக்க முடிந்தது. அடுத்து என்ஜினீயரிங் படிப்பேன். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதே எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி சந்தியா பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:-
சமஸ்கிருதம் - 198
ஆங்கிலம் - 194
இயற்பியல் - 199
வேதியியல் - 200
கம்ப்யூட்டர் சயின்ஸ் - 200
கணிதம் - 200
மொத்தம் - 1191
தமிழ் மற்றும் தமிழ் அல்லாத பிறமொழியை ஒரு மொழிப்பாடமாக எடுத்து படித்த மாணவிகளில் மாநிலத்திலேயே 2-வது இடத்தை சென்னை மாணவி வி.ஆர்.ஜெயபிரதா பிடித்து இருக்கிறார்.
சென்னை தியாகராயநகர் வித்யோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வி.ஆர்.ஜெயபிரதா 1,190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 2-வது இடத்தை பிடித்தார். அவர் 3 பாடங்களில் 200-க்கு 200 வாங்கியுள்ளார்.
பிரெஞ்சு மொழி பாடத்தில் மாநிலத்தில் முதல் இடத்தையும் அவர் பிடித்து இருக்கிறார்.
இவருடன் பிறந்த தங்கை ஜெயசுருதி இதே பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி 1,187 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். பிரெஞ்சு மொழிப்பாடத்தில் மாநிலத்தில் ஜெயசுருதி 3-வது இடத்தை பிடித்து உள்ளார். ஜெய சுருதியும், ஜெயபிரதாவும் இரட்டை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது தந்தை ரங்கராஜன் சென்னையில் தனியார் கம்பெனியில் பொது மேலாளராக உள்ளார். தாயார் லதா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தது குறித்து ஜெயபிரதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
என்னுடைய ஆசிரியர்கள், நண்பர்கள், பெற்றோர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளின் அருளால் தான் என்னால் மாநில அளவில் 2-வது இடத்தை பிடிக்க முடிந்தது. இந்த வெற்றியை நான் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன். எதிர்காலத்தில் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங்(இ.சி.இ.) படிக்க விரும்புகிறேன்.
என்னுடைய தங்கை இதே பள்ளியில் படிக்கிறார். நாங்கள் இரட்டை குழந்தைகள். பிரெஞ்சு பாட பிரிவில் நான் முதலிடத்தையும், தங்கை 3-வது இடத்தையும் பிடித்து இருக்கிறார். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. படிப்பை தவிர எனக்கு ஓவியம் வரைவதில் விரும்பம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதே பள்ளியில் ஜெர்மன் மொழி பாடத்தில் சாய் ஜனனி என்ற மாணவி 197 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவரை அவரது பெற்றோர் பாலசுப்பிரமணியன்-லதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதேபோல், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி எஸ்.மகாலட்சுமி, பிற மொழியை மொழிப் பாடமாக எடுத்து படித்ததில், மாநிலத்தில் 3-வது இடத்தை பிடித்தார். மொத்தம் 1189 மதிப்பெண்கள் பெற்ற இவர், கீழ்க்கட்டளையில் உள்ள ஹோலி பேமிலி கான்வென்ட் பள்ளியில் படித்தார். இவரது தந்தை ஸ்ரீதரன் மத்திய அரசு ஊழியராவார்.
கோடை விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ள மகாலட்சுமிக்கு, பள்ளி தாளாளர் மாஹி, முதல்வர் கிருட்டோ, ஆசிரியர்கள் போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். கொடைக்கானலில் இருந்த மாணவி மகாலட்சுமியிடம் தொலைபேசியில் பேசியபோது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வு முடிவு 14-ந் தேதி வெளியாகும் என்று முதலில் கூறியதால், நாங்கள் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டோம். ஆனால், அதன் பிறகு 9-ந் தேதியாக மாறியது. இருந்தாலும், குடும்பத்துடன் கொடைக்கானல் வந்துவிட்டோம்.
நான், நல்ல மார்க் கிடைக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என்று நினைக்கவில்லை. எல்லாம் கடவுளின் கிருபை. ஆசிரியர்கள் அடிக்கடி தேர்வுகள் நடத்தியும், புரியாத பாடங்களை சொல்லிக்கொடுத்தும் ஊக்கப்படுத்தினார்கள். அதனால்தான் என்னால் இவ்வளவு மார்க்குகள் பெற முடிந்தது. மேலும், எனது வீட்டிலும், நான் படிப்பதற்காக கேபிள் டி.வி.யை கூட கட் செய்துவிட்டார்கள். எனக்காக யாரும் டி.வி. பார்ப்பது கிடையாது. அதனால், எனது வெற்றிக்கு வீட்டில் உள்ளவர்களும் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: