ஆம்ஸ்டர்டாம், மார்ச். 3- லிபியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுத்தால், அதனை அதிபர் கடாபி மீது போர்குற்ற வழக்காக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்படும் என சர்வதேச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் அரசுக்கெதிராகவும், அதிபர் முஅம்மர் கடாபி பதவி விலக்கோரியும்
பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதிபர் கடாபி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அதனால் நாட்டில் ரத்த ஆறு ஓடினாலும் கவலையில்லை என கூறி வருகிறார். பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கடாபியை பதவி விலக வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர் பதவிலிருந்தும் நேற்று முன்தினம் லிபியா அதிரடியாக நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் லிபியா மீது தடை விதிக்க ஆலோசித்து வருகிறது.இந்நிலையில் நெதர்லாந்தின் ஹோக் நகரினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில் லிபியா அதிபர் கடாபி மீது போர் குற்ற வழக்கு தொடரப்படும் என வழக்கறிஞர் லூயிஸ் மொரினோ ஒகாம்பே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
கடாபி மீது போர்குற்ற வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் உள்ளன. இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் சமர்பிக்கப்படும். இதில் கடாபிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். இது தொடர்பாக சர்வதேச போலீஸ் ஏஜென்சியான இன்டர்போலின் உதவியையும் கோரப்படும். இதுவரை சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவழக்கு தொடர்பாக ஐந்து ஆப்ரிக்க நாடுகள் இடம்பெற்றுள்ளன. தற்போது வடஆப்ரிக்க நாடான லிபியா மீது போர்குற்ற வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நன்றி:தமிழ் கூடல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக