தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.3.11

பிரதமருக்கு ஆ.ராசா எழுதிய கடிதம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்


புதுடெல்லிமார்ச். 3- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராச எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்த வாசகங்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரியாக ஆ.ராசா பதவி
வகித்தபோது வழங்கப்பட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஆ.ராசா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதம் பற்றி நீதிபதிகள் விமர்சித்தனர்.
அந்த கடிதத்தின் தொனி மற்றும் நடைமுறை குறித்தும் அதில் இடம்பெற்றிருந்த `நியாயமற்றது', `ஏறுக்கு மாறானது', `விதிகளுக்கு பொருந்தாதது' போன்ற வார்த்தைகள் குறித்தும் நீதிபதிகள் ஆழ்ந்த வேதனை தெரிவித்தனர். இந்திய அரசியல் அமைப்பின் உயர் அதிகார பொறுப்பில் உள்ள பிரதமருக்கு எழுதிய அந்த கடிதம் மரியாதைக்குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடிதத்தில் இடம்பெறும் வார்த்தைகள் பண்புள்ளதாகவும், நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு லைசென்சு வழங்குவதை சில நாட்கள் தள்ளி வைக்கும்படி அறிவுறுத்தி தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங் ஆ.ராசாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த அறிவுரையை ஏற்க மறுத்து, கடந்த 2007 டிசம்பர் 26-ந்தேதி பிரதமருக்கு பதில் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தின் வாசகங்களை குறிப்பிட்டு நீதிபதிகள் கூறியதாவது:-
அந்த கடிதத்தின் வாசகங்கள் மிகவும் ஆட்சேபனைக்குரியது. பொதுவாக ஒருவர் தன்னைவிட வயது அதிகமானவருக்கு கடிதம் எழுதும் போது மரியாதையுடன் எழுத வேண்டும். பிரதமரின் யோசனைகள் விதிகளுக்கு முரணானது, நியாயமற்றது, ஏறுக்கு மாறானது என்று ஆ.ராசா குறிப்பிடலாமா? பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டும். அதில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய `அடைமொழி'களை தவிர்த்து இருக்கலாம். ஆ.ராசா பயன்படுத்திய வார்த்தைகள் வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை ரத்து செய்ய வேண்டும் என்று, டெல்லியில் உள்ள பொது நல வழக்கு மையம் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூசன், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உள்பட பலர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
2008-ம் ஆண்டில், 2001-ம் ஆண்டு விலைக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து இருப்பது விதிகளுக்கு முரணானது, சில நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக இந்த ஒதுக்கீடு நடந்துள்ளது என்று, வக்கீல் பிரசாந்த் பூசன் குற்றம் சாட்டினார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தொலை தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) மதிப்பீட்டின்படி அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்த பத்திரிகை தகவல் ஒன்றையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து `டிராய்' அமைப்பின் இழப்பு மதிப்பீடு குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்காக விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி தேதியை திடீரென்று முன்னதாக மாற்றியமைத்ததை எதிர்த்து சென்னையை சேர்ந்த எஸ்-டெல் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று இருந்தது. அந்த நிறுவனத்தை மிரட்டி பணிய வைத்த பிரச்சினையையும் வக்கீல் பிரசாந்த் பூசன் எழுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொலை தொடர்பு துறை சார்பில் எழுதப்பட்ட இரு கடிதங்களை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி தாக்கல் செய்யப்பட்ட கடிதங்களை பார்வையிட்ட நீதிபதிகள், அந்த நிறுவனத்துக்கு லைசென்சு ரத்து செய்யப்பட்டு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டு இருப்பது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வித்தியாசமான புதிய பரிமாணம் வெளிவந்திருப்பதாக குறிப்பிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் நாளை (இன்று) விவாதம் தொடங்க இருப்பதால், விசாரணையின் போது மீண்டும் இந்த கடிதங்கள் அடங்கிய கோப்பை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டனர்.    நன்றி:தமிழ்கூடல்

0 கருத்துகள்: