தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.11

லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்து தீர்மானம்


திரிபோலி, மார்ச். 9 லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு வந்துள்ளன.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து
வருகின்றன. ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் வசிப்பவர்களை தற்போது, கடாபி ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இச்சண்டையில், எத்தனை பேர் பலியாயினர் என்பது தெரியவில்லை. எனினும் கணிசமான அளவு பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருதரப்பு சண்டையில், கடாபி ராணுவம், போர் விமானங்களைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் போர் விமானங்கள் எதுவும் இல்லாததால், இதுவரை அவர்கள் பிடியில் இருந்த நகரங்கள் கடாபி வசமாகி வருகின்றன. இதனால் பீதியடைந்துள்ள எதிர்ப்பாளர்கள் விடுத்த அறிக்கையில், "லிபிய விவகாரத்தில் அன்னிய நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதித்தால் அதுவே எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்" என்று, சர்வதேச கோரிக்கை வைத்தனர். இதைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை செய்யும் தீர்மானம் ஒன்றை தயாரித்துள்ளன. இத்தீர்மானம் நாளை, ஐ.நா.,வில் விவாதத்திற்கு வரும் எனத் தெரிகிறது.
அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர், லிபியாவில் அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது சாத்தியமில்லை என்று, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். லிபியாவின் மீதான ராணுவ நடவடிக்கை அல்லது போர் விமானம் பறக்கத் தடை உள்ளிட்டவற்றுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைகள், லிபியா மீதான அன்னிய படையெடுப்புக்குச் சமம் என்றும் அது கருதுகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளதால், இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றவிடாமல் அதனால் தடுத்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வைத் தொடர்ந்து ஜப்பானும், தன் நாட்டில் உள்ள கடாபி சொத்துக்களை முடக்கி, லிபியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதற்கிடையில், லிபியாவை விட்டு வெளியேறுவது குறித்து எதிர்த்தரப்புக்கு கடாபி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தன் தரப்பில் ஒரு பிரதிநிதியை பெங்காசியில் இயங்கி வரும் இடைக்கால தேசிய கவுன்சில் அரசிடம் அனுப்பி வைத்தார். தானும் தன் குடும்பத்தாரும் சொத்துக்களுடன் லிபியாவில் இருந்து பத்திரமாக வெளியேற அனுமதியளிக்க வேண்டும், எதிர்காலத்தில் தன் மீது எவ்வித வழக்கும் போடக் கூடாது, இடைக்கால அரசை அங்கீகரிக்கும் விதமாக பார்லிமென்டில் ஒப்புதல் அளிக்கப்படும் என்ற கோரிக்கைகளை அவர் வைத்துள்ளார். ஆனால், கடாபியின் கோரிக்கையை ஏற்க எதிர்ப்பாளர்கள் மறுத்து விட்டனர். அவர், அவ்வாறு எளிதாக லிபியாவை விட்டு வெளியேறினால் அது, இதுவரை பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கூறியுள்ளனர். இடைக்கால அரசின் ஊடக செய்தித் தொடர்பாளர் முஸ்தபா கெரானி கூறுகையில், கடாபியிடம் இருந்து அதுபோன்ற கோரிக்கை வந்தது உண்மை தான். ஆனால், இன்றைக்கு லிபியா ரத்தம் சிந்தக் காரணமான அந்த ஆளை நாங்கள் எதற்காக நம்ப வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். கடாபி தப்பிச் செல்வது குறித்த இத்தகவலை லிபிய அரசு மறுத்துள்ளது.
லிபிய வான்வெளி மீதான 24 மணி நேர "வான்வெளி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு" (அவாக்ஸ்) முறையை நேட்டோ அமைப்பு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், நேட்டோ கண்காணிப்பு விமானங்கள் லிபிய வான்வெளியில் 24 மணி நேரமும், பறக்கும் விமானங்களை அடையாளம் கண்டறியும்.
இந்நிலையில் லிபிய அதிபர் பதவியிலிருந்து விலக கடாபிக்கு 72 மணி நேரம் காலகெடு விதிக்கப்பட்டுள்ளது. கடாபி பதவி விலகினால் போராட்டங்களை கைவிடுவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடாபி பதவி விலக மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்: