தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.3.11

கஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது – ஆம்னஸ்டி


புதுடெல்லி:பொது பாதுகாப்புச் சட்டம் (Public Safety Act in kashmir) கஷ்மீரில் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் கஷ்மீரில் 20 ஆயிரம் பேர் இச்சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எவ்வித
குற்றமும் சுமத்தப்படாமல்,விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என ஆம்னஸ்டியின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
சட்டமில்லாத சட்டம் என பொது பாதுகாப்புச் சட்டத்தைக் குறித்து ஆம்னஸ்டி கூறுகிறது.
இச்சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென மாநில அரசிடம் ஆம்னஸ்டி வலியுறுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இச்சட்டத்தின்படி சிறையிலடைக்கப்படுகின்றனர்.
2010 ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 322 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். எவ்வித குற்றத்தையும் சுமத்தாமலும், விசாரணையில்லாமலும் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் நோக்கம், பொது சமூகத்திலிருந்து இவர்களை அகற்றுவதே. இவர்களில் பலர் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகளை தடைச் செய்யும் நோக்கில்தான் இவர்கள் பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்படுகின்றனர் என ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் ஆசியா பசிபிக் இயக்குநர் ஷாம் ஸரீஃபி தெரிவிக்கிறார்.
அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள்,போராளிக் குழுக்களின் உறுப்பினர்கள் அல்லது அதன் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் இச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுவர்களும் அடங்குவர் என ஸரீஃபி சுட்டிக்காட்டுகிறார்.
பல நேரங்களில் இவர்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வேளையில் வழக்கறிஞர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ இவர்களை காண்பதற்கு கூட அனுமதிப்பதில்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே கஷ்மீரில் ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகவும், கடந்த ஐந்து வருடங்களுக்கிடையே வீதியில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்துவது பெருமளவில் அதிகரித்திருப்பதாகவும் ஆம்னஸ்டியின் அறிக்கை கூறுகிறது.
போராட்டத்தின் பாணி மாறிய பிறகும் குற்றம் இழைப்பவர்கள் மீது ஏதேனும் குற்றவியல் சட்டத்தை சுமத்துவதற்கு பதிலாக பொது பாதுகாப்புச் சட்டத்தை ஜம்மு கஷ்மீர் அதிகாரிகள் பிரயோகிப்பது தொடருகிறது.
சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்துவிட்டு சட்டத்திற்கு அப்பால் போலீஸிற்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிக அதிகாரத்தை வழங்குவதற்குத்தான் இத்தகைய சட்டங்கள் வழிவகுப்பதாக ஸரீஃபி கூறுகிறார்.
பொது பாதுகாப்புச் சட்டத்தின் படி குற்றஞ்சாட்டப்படுபவர்கள் சாதாரண கிரிமினல் குற்றம் சுமத்தப்படும் அளவுக்குக்கூட எவ்வித குற்றத்தையும் செய்யாதவர்கள் என இந்தியாவின் உச்சநீதிமன்றமே இச்சட்டத்தைக் குறித்து விமர்சித்துள்ளது.
சட்டவிரோதமாக சிறையிலடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலைச் செய்யவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை கஷ்மீர் மாநில அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டுகிறது.
பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்படுபவர்களுக்கு குற்றம் சுமத்தாமலேயே இரண்டு ஆண்டுகள் வரை ஜாமீன் வழங்கத் தேவையில்லை.
அரசுத் தரப்பிற்கு இச்சட்டம் ஏராளமான அதிகாரங்களை வழங்கியுள்ளது. சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கு முறையான சட்டரீதியிலான போராட்டத்திற்குரிய வாய்ப்புகளை மறுக்கிறது இச்சட்டம்.
ஒருவர் நிரபராதி என கண்டறிந்து பல வருடங்களுக்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டால் அவர் அனுபவித்த கொடுமைகளுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சாத்தியமில்லை என ஆம்னஸ்டியின் அறிக்கை கூறுகிறது.
மனித உரிமைக் குறித்த சர்வதேச சட்டங்களை மதித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆம்னஸ்டி ஜம்மு கஷ்மீர் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவது இந்தியா பேணும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிரானதாகும்.
கஷ்மீரில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க இந்தியா ஐ.நா பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டுமென ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.

0 கருத்துகள்: