கெய்ரோ, மார்ச். 7- எகிப்து நாட்டின் அதிபராக இருந்து புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய அதிபர் முபாரக் உலகப்பெரிய கோடீசுவரர்களையே தோற்கடிக்கும் அளவுக்கு பெரிய கோடீசுவரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.
எகிப்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் முபாரக். இவரை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்
நடத்தினார்கள். 17 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு பிறகு அவர் பதவி இழந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவரது மனைவி மற்றும் மகன்கள் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் எகிப்து நாட்டுக்கு சொந்தமான ஒரு தீவில் அவர் அடைக்கலம் புகுந்து இருக்கிறார் அங்கு உடல்நலம் இல்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அவர் பதவியில் இருந்தபோது ஊழல் மற்றும் முறைகேடுகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இவர் தன் பணத்தை எல்லாம் வெளிநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகளில் ரகசிய கணக்கில் டெபாசிட்டு செய்து இருக்கிறார்.
வெளிநாடுகளில் ஆடம்பர வீடுகளையும், ஓட்டல்களையும் வாங்கி குவித்து இருக்கிறார். அவருக்கு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹட்டனிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பீவர்லி ஹில்ஸ் நகரிலும் ஆடம்பரமான சொகுசு வீடுகள் உள்ளன.
அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து நடத்திய வர்த்தக நிறுவனங்கள் மூலம் கோடி கோடியாக சம்பாதித்தார் என்று டர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டோபர் டேவிட்சன் தெரிவித்தார்.
மெக்சிகோவை சேர்ந்த பிரபல வர்த்தகர் கார்லோஸ் ஸ்லிம் தான் உலகின் முதல் பெரிய கோடீசுவரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் கோடி ஆகும். இந்த அளவுக்கு சொத்து வேறு எந்த பணக்காரரிடம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரியாததால் அவர் தான் உலகின் முதல் கோடீசுவரராக அறிவிக்கப்பட்டார். இப்போது முபாரக்கின் சொத்து மதிப்பு கர்லோசை விட அதிகமாக இருப்பதால் முபாரக் தான் உலகின் 1-ம் நம்பர் கோடீசுவரர் ஆவார். உலகின் முதல் கோடீவரராக இருந்து 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட பில்கேட்சின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக