தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.12

குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார் ஐ.நா செயலாளர் பான் கீ மூன்


இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் அப்பா வி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. தடுக்கத் தவறி விட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஐ.நா . செயலாளர் பான் கீ மூனையும் போர்க்குற்றவாளி யாகச்சுட்டி உலகளாவிய ரீதியில் போராட்டங்க ளைத் தமிழ்மக்கள் நடத்த வேண்டும். தமிழ்மக்களு க்கான நியாயபூர்வமான உரிமைகள் கிடைக்க  சர்வ தேசத்தினை வலியுறுத்த முன் வரவேண்டுமென ஜ னநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ. க ணேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவரது சமூக
வலைத்தளத்தில் இந்நொடியில் என் மனதில் எனும் தலைப்பிலான குறி ப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
உலகம் முழுக்கவும், தமிழகத்திலும் வாழும் உலக தமிழர்களுக்கு ஒரு கோரிக்கை!
அப்பாவி தமிழ் மக்களை பலியிட்டுதான் போர் முடிவுக்கு வந்தது என்ற உண்மை, சார்ல்ஸ் பெற்றி குழுவினர் ஆய்வு செய்து ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள ஐநா உள்ளக அறிக்கையின் மூலமாக இன்று பகிரங்கமாகியுள்ளது.
40,000 க்கு மேற்பட்ட பெருந்தொகை அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்துதான், இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், புலிகளை இலங்கை அரசாங்கம் ஒழித்தது என்ற உண்மையும், இது தொடர்பில் ஐநா காத்திரமாக செயல்படாமல் பொறுப்புகளிலிருந்து தவறிவிட்டது என்ற உண்மையும், இப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையின் மூலமாக பகிரங்கமாகியுள்ளது.
இதன்மூலம், போரிட்ட இலங்கை அரசாங்கம், புலிகள் ஆகிய இரண்டு தரப்பினருடன் சேர்ந்து ஐநா செயலாளர் நாயகம் பான்-கிமூனும் குற்றவாளி கூண்டில் நிற்கிறார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஐநா எப்படி நடக்கப்போகிறது என்பதற்காக, இலங்கை விவகாரத்தை முன்னுதாரண பாடமாக கொள்வோம் என்பது பற்றி மாத்திரம் பேசி தப்புவதற்கு, பான்-கிமூனுக்கு இடம் தரமுடியாது.
நடந்துவிட்ட படுகொலைகளுக்கும், தாம் அப்பாவி மக்களை காக்க தவறிவிட்டமைக்கும், ஐநா செயலாளர் நாயகம் என்ற முறையில் பான்-கிமூனின் பதில் என்ன என்பதை உலக தமிழர்கள், உலக மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து கேட்டு குரல் எழுப்ப வேண்டும்.
படுகொலைகளை தடுக்கும் பொறுப்பில் இருந்து தவறியமைக்காக ஐநா செயலாளர் நாயகம் உலக நீதி மன்றங்களில் நிறுத்தப்பட முடியுமா என நாம் ஆராய வேண்டும். எமது குரல்கள் ஐநாவினதும், உலக சமுதாயத்தினதும் மனசாட்சியை உலுக்க வேண்டும்.
இப்படியான படுகொலைகள் உலக வரலாற்றில் நடந்து உள்ளன. இது முதன்முறை அல்ல. ஆகவே ஐநா நாடகம் நடிக்க முடியாது. புதிய பாடம் படிக்கிறேன் என பான்-கிமூன் பள்ளிக்கு போக முடியாது.
படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதும், தண்டணைகள் வழங்குவதும் ஒரு விடயம். ஆனால், இங்கே இலங்கையில் நடைமுறை நிலை என்ன?
அரசாங்கம் படுகொலைகள் நடந்துவிட்டன என்ற உண்மையை ஏற்றுகொள்ள மறுக்கிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் என்ற பொய்யை சிங்கள மக்களுக்கு சொல்லி வருகிறது. அப்பாவி மக்கள் உயிர் தப்புவதற்கு கடைசி சந்தர்ப்பம் வழங்க தாம் மறுத்துவிட்டோம் என்ற கொடும் உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
அதுமட்டும் அல்ல. போர்குற்றம் என்பது ஒரு புறம் இருக்க, போருக்கு அடிப்படை காரணமான தேசிய இனப்பிரச்சினையை நேர்மையாக தீர்த்து வைப்பதற்கு மறுக்கிறது.
இந்த அரசாங்கம்;
"புலிகள் தான் ஒரே தடை, யுத்தம் முடியட்டும், தேசிய இனப்பிரச்சினையை உடன் தீர்க்கிறோம்" என உலகத்துக்கு தந்த வாக்குறுதிகளை மீறுகிறது. தானே அமைத்து முன் வைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளைகூட அமுலாக்காமல் வெட்கமில்லாமல் பொய் சொல்கிறது.
கடத்தப்பட்டு, சரணடைந்து காணாமல் போனவர்களின் பெயர்களை குறைந்தபட்சம் வெளியிடுவதற்குகூட இந்த அரசாங்கம் மறுக்கிறது. வடக்கிலே, குறிப்பாக வன்னியிலே தமிழ் பெண்களும், குழந்தைகளும் நிர்க்கதியாக அவல வாழ்க்கை வாழும் வண்ணம் இராணுவ காட்டாட்சி நடத்தி வருகிறது.
தமிழ் பேசும் மக்களின் நிலங்கள், மதவழிப்பாட்டு நிலையங்கள் அபகரிக்கப்ப்பட்டு, தாக்கி அழிக்கப்படும் எதேச்சதிகாரத்தை முன் கொண்டு செல்கிறது. யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இராணுவ பிரசன்னத்தை குறைக்காமல், கூட்டி வருகிறது. மக்களுக்கு வீடு கட்டாமல், இராணுவ குடியிருப்புகளை கட்டி, இன விகிதாசாரத்தை மாற்றிவருகிறது.
நாடு முழுக்க நடைபெற்ற மாகாணசபை தேர்தல்களை, வட மாகாணத்தில் மாத்திரம் நடத்தாமல், சாக்கு போக்கு சொல்லி காலத்தை கடத்துகிறது. பதிமூன்றுக்கு மேலே போகிறேன் என்று சொல்லி விட்டு, இன்று இருப்பதையும் இல்லாமல் செய்ய திட்டம் தீட்டி இனவாதம் கக்குகிறது.
யுத்தத்துக்கு முழு உதவிகளையும் இந்தியாவிடம் பெற்றுக்கொண்டு இன்று இந்தியாவின் கன்னத்தில் அறைந்து எகத்தாளமாக சிரிக்கிறது. அதிகாரத்தை பிரித்து, ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வோம் என்று தமிழர்களும், முஸ்லிம்களும் சொல்வதை காதில் வாங்காமல், இனவாதிகளின் எண்ணப்படி முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக மாற்றும் திட்டத்தை தீட்டி செயற்பட்டு வருகிறது.
இந்த பின்னணியில், இதுதான் நமக்கு இறுதி சந்தர்ப்பம். ஐநா சபையையும், உலகையும் நமது ஒன்றிணைந்த குரல் உலுக்க வேண்டும்! குறிப்பாக பான்-கிமூனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி நியாயம் கேட்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: