தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.5.12

ஒரே நாளில் 25 கோடிக்கு விளம்பரம்: ஜெயாவின் புதிய புரட்சி!


சென்னை:ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது. தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.
ஒருவருட சாதனைகள் தாம்(சாதனையா? வேதனையா? என்பது வேறு விஷயம்) பல மொழி விளம்பரங்களின் உள்ளடக்கம். விளம்பரத்திற்கு இந்தியாவில் செலவழிக்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவே. பெரும் நிறுவனங்களோ, கார்ப்பரேட்டுகளோ இதுவரை இவ்வளவு தொகையை விளம்பரத்திற்காக செலவிட்டதில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெரும்பாலான இந்திய பதிப்புகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ், த ஹிந்து, எக்கணாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், பிசினஸ் லைன், மிண்ட், பிசினஸ் ஸ்டாண்டர்ட்ஸ் ஆகிய பத்திரிகைகளில் நாட்டின் பெரும் நகரங்களின் அனைத்து பதிப்புகளிலும் விளம்பரம் வெளியிடப்பட்டது.
முதல் பக்கம் மட்டுமல்ல மூன்று உள்பக்கங்கள் முழுவதும் பல வர்ணங்களில் விளம்பரத்திற்காக பத்திரிகைகள் இடத்தை ஒதுக்கின. சென்னையிலும், மும்பையிலும் வெளிவராத கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மன், டெலிக்ராஃப் போன்ற பத்திரிகைகளிலும் கூட விளம்பரம் வெளியானது. வழக்கமாக பெரும் நிறுவனங்கள் தேச முழுவதும் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறியடிக்கும் விதமாக ஜெயாவின் விளம்பர சாதனை அமைந்துள்ளது.
தமிழகத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பல மணிநேரங்கள் மின் தடையால் மக்கள் பெரும் அவதியுறும் வேளையிலும் மின்கட்டண உயர்வு, கூடங்குள போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், சட்ட ஒழுங்கு சீரழிவு என அரசு நிர்வாகம் சீரழிந்துள்ள சூழலில் அவற்றை மூடி மறைக்க அரசு கஜானாவில் இருந்து இவ்வளவு பெரிய ஆடம்பர விளம்பரங்களை மேற்கொண்டுள்ள ஜெயாவின் அரசு கடந்த ஓர் ஆண்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
News@thoothu

0 கருத்துகள்: