தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.2.12

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பல நாடுகளுடன் இணைந்து கூட்டாக முன்வைக்கிறது அமெரிக்கா!


ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பல நாடுகள் இணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ளதாக ஜெனிவாவில் உள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் நகர்வுகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்கி வருகிறது. முன்னதாக இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா அல்லது கனடா சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டது.
பின்னர், அணிசேரா அமைப்பில் உள்ள ஆபிரிக்க நாடு ஒன்று இதனை முன்வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.  குறிப்பாக கெமரூன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் சிறிலங்கா சந்தேகித்தது. ஆனால் சிறிலங்கா இந்தத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு முழுமூச்சுடன் செயற்பட்டு வரும் நிலையில், வலுவான நிலையில் தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம், புவியியல் ரீதியாக ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட நாடுகள் இணைந்து கூட்டாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஆபிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா என பிராந்திய ரீதியில் குறைந்தது ஐந்து நாடுகளின் கூட்டு அனுசரணையுடன் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா தலைமையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வே அறிவித்துள்ளது. பிரித்தானியாவும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
அதேவேளை, ஒஸ்ரியா, பொற்ஸ்வானா, கௌதமாலா, லிபியா, ஹங்கேரி, போலந்து, ஸ்பெய்ன், ருமேனியா, உகண்டா, கெமரூன், நைஜீரியா போன்ற நாடுகளும் இதற்குப் பின்னணியில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்தமாதம் பொற்ஸ்வானா வெளிவிவகார அமைச்சரை சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் தற்போது பொற்ஸ்வானா வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும் முயற்சிகளில் பீரிஸ் தீவிரமாக இறங்கியுள்ளார்.  அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான வரைவு ஜெனிவாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் விநியோகிக்கப்பட்டு அதனை செம்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு கோரி அமெரிக்காகவும்., அதனை முறிடியப்பதற்கு ஆதரவு கோரி சிறிலங்காவும் ஜெனிவாவில் தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.  இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, வரும் மார்ச் 21ம் நாளுக்கும் 23ம் நாளுக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

0 கருத்துகள்: