ஈரான் அணு உலைகளை ஆய்வு செய்ய, சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு குழுவினர் 6 பேர் வந்துள்ளனர்.அணுஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் வலியுறுத்தின. ஆனால், ஆயுதங்கள் தயாரிக்கவில்லை. அணுசக்தி திட்டங்களைதான் மேற்கொண்டுள்ளோம் என்று ஈரான் கூறியது. இதனால் ஈரான் மீது பல நாடுகள் பொருளாதார தடை
விதித்துள்ளன. மேலும் ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு குழுவினரை, ஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து, கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டது. அதன்படி, சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு குழுவினர் 6 பேர் சனிக்கிழமை டெஹ்ரான் வந்தனர். டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த தலைமை ஆய்வாளர் ஹெர்மன் நேக்கர்ட்ஸ் தலைமையிலான குழுவினரை ஈரான் அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
இக்குழுவினர் இன்றும், நாளையும் ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்வார்கள். அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுகிறதா, அணு உலைகள் பாதுகாப்பாக அமைக்கப்படுகிறதா போன்ற பல்வேறு விஷயங்களை இவர்கள் ஆராய உள்ளனர். இதனால் ஈரானுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மோதலுக்கு தீர்வு கிடைக்கும் என்று சர்வதேச அணுசக்தி கழக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக