தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.12.11

ஈராக்குடன் இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு தயார்: ஈரான்


தனது அயல் நாடான ஈராக்குடன் இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்தரிப்பதற்கு தயாராகியுள்ளதாக ஈரானின் உயர் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி ஒருவார காலமாகும் நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஈரானிய இஸ்லாமிய குடியரசானது தனது நட்பு மற்றும் சகோதர நாடான ஈராக்குடன் அனைத்து வகையான இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் விஸ்தரிக்கத் தயாராகவுள்ளது என  ஈரானிய பாதுகாப்புப் படைகளின் பிரதம படையதிகாரி  ஹசான் பைரூஸபாதி தெரிவித்துள்ளார். 

சதாம் ஹுஸைனுக்குப் பின்னர் ஈராக்கில் பெரும்பான்மையான ஷியா முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஈரான் - ஈராக் உறவு அண்மைக்காலமாக பலமடைந்து வருகிறது.

அமெரிக்க படைகள் வெளியேறியமையானது ஈராக்கில் ஈரான்  தனது செல்வாக்கை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரானும் ஈராக்கும் 1980 முதல் 1988 வரை பாரிய யுத்தத்தில் மோதின. இதனால் 15 லட்சம் பேர் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: